Home இந்தியா இந்தியப் பொதுத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் #7 – கிரிக்கெட்டில் விளாசிய கௌதம் கம்பீர் கிழக்கு...

இந்தியப் பொதுத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் #7 – கிரிக்கெட்டில் விளாசிய கௌதம் கம்பீர் கிழக்கு டில்லியிலும் கலக்குவாரா?

975
0
SHARE
Ad

(இந்தியப் பொதுத் தேர்தலில் மிகவும் ஆவலுடன் முடிவுகள் எதிர்பார்க்கப்படும் – பிரபலங்கள் அல்லது முக்கிய வேட்பாளர்கள் மோதும் – சில நட்சத்திரத் தொகுதிகளின் கள நிலவரங்களைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

புதுடில்லி – நட்சத்திரத் தொகுதிகள் என்றால் அது திரையுலகப் பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகள் மட்டும் தானா? அல்லது அரசியல் கட்சிகளின் பிரபல தலைகள் எதிரும் புதிருமாக மோதும் தொகுதிகள் மட்டும்தானா?

இல்லை! இந்த முறை சில கிரிக்கெட் பிரபலங்களும் களம் காண்கின்றனர்.

#TamilSchoolmychoice

அவர்களில் ஒருவர்தான் இந்திய கிரிக்கெட் குழுவிலும், ஐபிஎல் போட்டிகளிலும் கிரிக்கெட் விளையாடி புகழ்பெற்ற கௌதம் கம்பீர்!

கிரிக்கெட் மைதானத்தில் தனது திறமையைக் காட்டிய 37 வயது கௌதம் கம்பீரை கிழக்கு டில்லியில் போட்டியிட வளைத்துப் போட்டிருக்கும் கட்சி பாஜக. கடந்த 2014 பொதுத் தேர்தலிலும் இந்தத் தொகுதியில் பாஜகதான் வென்றது.

இந்த முறை கிழக்கு டில்லியில் கௌதம் கம்பீரை எதிர்த்து நிற்பது ஆம் ஆத்மி கட்சியின் பெண் வேட்பாளரான அதிஷி மர்லினா. 37 வயதான இவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவியாவார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் அர்விண்டர் சிங் லவ்லி போட்டியிடும் இந்தத் தொகுதியில் பிஎஸ்பி போன்ற சில அரசியல் கட்சிகள் போட்டியிட்டாலும், போட்டி என்னவோ, பாஜகவின் கௌதம் கம்பீருக்கும் ஆம் ஆத்மியின் வேட்பாளருக்கும்தான்!

அதிலும் அண்மையில் தன்னைப் பற்றி கேவலமாக எழுதி பரப்புரை ஏடு ஒன்றை கௌதம் கம்பீர் வெளியிட்டார் என ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கண்கலங்க, நான் அப்படி பேசவோ, அறிக்கை கொடுக்கவோ இல்லை என மறுத்திருக்கிறார் கௌதம் கம்பீர்.

கௌதம் கம்பீர் அப்படிப்பட்டவரல்ல – பெண்களை மதிப்பவர் என நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கியிருக்கிறார், ஒரு காலத்தில் கௌதமோடு கிரிக்கெட் மைதானத்தில் ஒன்றாக விளையாடிய ஹர்பஜான் சிங்.

இந்தப் பரபரப்போடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மே 12-ஆம் தேதி நடைபெறவிருக்கும் 6-ஆம் கட்ட வாக்களிப்பின்போது கிழக்கு டில்லி உள்ளிட்ட 7 டில்லி தொகுதிகளுக்கும் வாக்களிப்பு நடைபெறுகிறது.

டில்லி தவிர, பீகார் மாநிலத்தின் 8 நாடாளுமன்றத் தொகுதிகள், ஹரியானாவின் 10 தொகுதிகள், ஜார்கண்ட் மாநிலத்தின் 4 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தின் 8 தொகுதிகள் உத்தரப் பிரதேசத்தின் 14 தொகுதிகள், மேற்கு வங்காளத்தின் 8 தொகுதிகள், ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மே 12-ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறுகிறது.

எல்லாத் தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியிடப்படும்.

கிரிக்கெட் இரசிகர்களின் மனங்களில் இன்னும் தனியிடத்தைப் பிடித்திருக்கும் கௌதம் கம்பீரின் கிரிக்கெட் புகழால், அவர் போட்டியிடும் கிழக்கு டில்லி தொகுதியும் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது.

கிரிக்கெட் மைதானத்தில் ஓடி, ஓடி ஓட்டங்களை (ரன்களை) எடுத்த கௌதம் கம்பீர் கடந்த ஓரிரு வாரங்களாக கிழக்கு டில்லியின் வீதிகளில் ஓடியாடி வாக்கு வேட்டையாடி வருகின்றார்.

கிரிக்கெட்டில் பெற்ற புகழ் அவருக்குக் கைகொடுத்து அவரை கிழக்கு டில்லி நாடாளுமன்ற உறுப்பினராக்குமா?

-இரா.முத்தரசன்