Home நாடு பயனீட்டாளர் துறையின் முன்னோடி எஸ்.எம்.முகமட் இட்ரிஸ் காலமானார்

பயனீட்டாளர் துறையின் முன்னோடி எஸ்.எம்.முகமட் இட்ரிஸ் காலமானார்

955
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – மலேசியாவில் பயனீட்டாளர் நலன்களைப் பாதுகாப்பதிலும், பயனீட்டாளர் பிரச்சனைகளை ஒரு அரசு சார்பற்ற இயக்கமாக ‘பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின்’ மூலம் முன்னெடுத்த வகையிலும் தனித்துவம் மிக்க சாதனையாளராகத் திகழ்ந்த எஸ்.எம்.முகமட் இட்ரிஸ், தனது 93-வது வயதில் இன்று காலமானார்.

இருதயக் கோளாறினால் அவர் பிற்பகல் 4.45 மணியளவில் பினாங்கு கிளனிகல்ஸ் தனியார் மருத்துவமனையில் காலமானார். உடல் நலம் குன்றிய நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவராக இருந்த அவர் நாட்டில் மக்களின் வாழ்க்கை நலத்தை  மேம்படுத்துவதற்கும், பயனீட்டாளர்களுக்கான உரிமைகளை நிலை நிறுத்துவதிலும் பெரும் பாடுபட்டிருக்கிறார். பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தை நாட்டிலேயே சிறந்த, முன்னுதாரணமான அரசு சார்பற்ற இயக்கமாக வளர்த்ததிலும், பல்வேறு அனைத்துலக நிறுவனங்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு எதிராக உண்மையை எடுத்துரைத்ததிலும் முகமது இட்ரிஸ் முன்னணி வகித்தார்.

#TamilSchoolmychoice

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் முகமது இட்ரிசும் ஒருவராவார். இவரது போராட்டத்தின் விளைவாக 1975-ஆம் ஆண்டில் சுற்றுச் சூழல் இலாகா அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது.

குறிப்பாக மதுபானங்களில் நச்சுத் தன்மை கலந்திருப்பது குறித்தும், சம்சு எனப்படும் மலிவு விலை மதுபான விற்பனைக்கு எதிராகவும் முகமது இட்ரிஸ் நீண்ட காலமாகப் போராடி வந்தார்.

நாளை சனிக்கிழமை காலை 10.00 மணிவரை எண்: 2, ரோஸ் அவென்யூ என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் அன்னாரின் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
அதன்பின்னர் ஜாலான் பேராக்கிலுள்ள மஸ்ஜிட் ஹாஷிம் யாஹ்யா மசூதியின் மயானக் கொல்லையில் அவர் நல்லடக்கம் செய்யப்படுவார்.