ஜோர்ஜ் டவுன் – சிறைச்சாலையில் மரணமுற்ற 44 வயதான அன்பழகன் முத்துவின் குடும்பத்தினருடன் நேற்று சனிக்கிழமை இங்கு பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி, இவ்வாறு தடுப்புக் காவலில் தொடர்ந்து மரணங்கள் நிகழ்வது என்பது துரதிர்ஷ்டசாலிகளான ஏழை மக்களுக்கு விதிக்கப்பட்ட சாபக்கேடாகிவிட்டது எனச் சாடினார்.
மேலும் தனது முகநூல் பக்கத்திலும் அன்பழகனின் மரணம் குறித்து தனது கருத்துகளை இராமசாமி பதிவு செய்தார்.
“பெர்லிஸ் சிறைச்சாலையில் இருந்த அன்பழகன் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பினாங்கு சிறைச்சாலை ஒன்றுக்கு அவரது குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க மாற்றப்பட்டார். பினாங்கில் இருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை அடிக்கடி சென்று பார்க்க முடியும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் அவர் மாற்றலாகி வந்தார். ஆனால் கடந்த மே 11-ஆம் தேதி (2019) அவர் தடுப்புக் காவலில் இருக்கும்போது திடீரென மரணமடைந்தார். மரணத்துக்குப் பின் அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் ‘தூக்கு மாட்டிக் கொண்டதால் இறந்தார்’ என மரண சான்றிதழ் தந்துள்ளனர். தனது குடும்பத்தினரிடம் எந்த ஒரு புகாரும் செய்யாத அன்பழகன் திடீரென ஒரு கம்பளிப் போர்வையைக் கொண்டு எவ்வாறு தூக்கு மாட்டிக் கொண்டிருக்க முடியும்?” என இராமசாமி கேள்வி எழுப்பினார்.
41 வயதான அன்பழகனின் மனைவி தேவிகா சுப்ரமணியும், பிறை சேவை மையத்தில் இராமசாமி நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதே கேள்வியை எழுப்பினார்.
தனது கணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார் எனத் தான் நம்பவில்லை என்று கூறிய தேவிகா, இது குறித்து மே 17-ஆம் தேதி காவல் துறையில் புகார் ஒன்றையும் செய்திருக்கிறார்.
கடந்த மே 11-ஆம் தேதி சிறைக் காவல் அதிகாரி தன்னை அழைத்து தனது கணவரின் மரணம் குறித்து தெரிவித்ததாகவும் அப்போது தனது கணவரின் இடது கண்ணிற்கு மேற்புறத்தில் காயம் பட்டிருப்பதைக் கண்டதாகவும் தேவிகா தெரிவித்தார்.
தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் தேவிகா கூறினார்.
சிறைச்சாலைகளிலும், தடுப்புக் காவல்களிலும் கைதிகளின் மரணங்கள் நிகழும் சம்பவங்கள் தொடர்வதாகக் கூறிய இராமசாமி, காவல் துறையினருக்கான விசாரணை ஆணையம் அமையவிருப்பதை இதனால்தான் ஆர்வமுடன் வரவேற்பதாகக் கூறினார். எனினும், இந்த ஆணையம் இதுபோன்ற மரணங்களை விசாரிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருக்குமா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என்றும் இராமசாமி கவலை தெரிவித்தார்.
“அன்பழகனின் மரணத்திற்கு காவல் துறை அதிகாரிகள்தான் காரணம் என நான் குற்றம் சாட்டவில்லை. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது பகிரங்கமாக தெரியவர வேண்டும். அவர் தாக்கப்பட்டாரா, உண்மையில் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது போன்ற விவரங்கள் அறிவிக்கப்பட வேண்டும். மரணச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர் எவ்வாறு தூக்கில் தொங்கினார் என்றும் மட்டும் அறிக்கை கொடுத்தார்?” என்றும் இராமசாமி கேள்வி எழுப்பினார்.
பினாங்கு பொது மருத்துவமனை நிர்வாகம் மேலும் விரிவான மருத்துவ அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட இராமசாமி, இரண்டாவது முறையாக அன்பழகன் உடலைப் பரிசோதனை செய்வதே முறையான நடவடிக்கையாக இருக்கும் என்றும் கேட்டுக் கொண்டார்.
“அன்பழகனின் மனைவி காவல் துறையில் புகார் செய்வதை சில அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அதே வேளையில் அன்பழகனின் நல்லுடல் தகனம் செய்யப்பட வேண்டும் என்றும் புதைக்கப்படக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இவையெல்லாம் நியாயமில்லாத முறையற்ற காவல் துறை நடவடிக்கைகளாகும். பொறுப்பற்ற அதிகாரிகள் இதற்குக் காரணமா அல்லது மூடி மறைக்கும் செயலா என்பது விசாரிக்கப்பட வேண்டும்” என்றும் இராமசாமி பத்திரிக்கையாளர் சந்திப்பில் வேண்டுகோள் விடுத்தார்.
தொடரும் இதுபோன்ற தடுப்புக் காவல் மரணங்கள் இன, மத பேதமின்றி ஏழை மக்களுக்கும், கீழ்நிலை தொழிலாளர் குடும்பங்களுக்கும்தான் நேர்கிறது, இது அந்த துரதிர்ஷ்டாலிகளின் சாபக்கேடாகும் என்றும் இராமசாமி சாடினார்.