குவாந்தான் – இசிஆர்எல் எனப்படும் கிழக்குக் கரை இரயில் திட்டத்தை நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் மீண்டும் தொடங்குவதால் போக்குவரத்துக்கான வசதிகள் அதிகரிக்கும் என்பதோடு, குவாந்தான் துறைமுகத்தின் வணிக நடவடிக்கைகளும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசிஆர்எல் திட்டம் கிழக்குக் கரையின் முக்கிய துறைமுகமான குவாந்தானையும், மேற்குக் கரையோரத்தின் முக்கியத் துறைமுகமான போர்ட் கிள்ளானையும் இணைப்பதால் இந்த இரு துறைமுகங்களுக்கு இடையிலான சரக்குப் பரிமாற்றப் போக்குவரத்தும் அதிகரிக்கும்.
இதற்கிடையில் குவாந்தான் துறைமுகம் ஆழ்கடல் துறைமுகமாக மேம்படுத்தப்பட்டிருப்பதோடு, கட்டற்ற வணிக வளாகமாகவும் வகைப்படுத்தப்பட்டிருப்பது குவாந்தான் துறைமுகத்தின் ஈர்ப்பை மேலும் அதிகரிக்கும்.
மேலும் இசிஆர்எல் இரயில் பாதையெங்கும் மேம்படுத்தப்படாத நிலங்களுக்கான மதிப்பு கூடும் என்பதோடு, இந்தப் பகுதிகளில் நில மேம்பாட்டு திட்டங்களும் புதிதாகத் தொடங்கப்படலாம்.
இசிஆர்எல் திட்டத்தின் செலவினத் தொகை கணிசமாகக் குறைக்கப்பட்டு, அதன் பயணப் பாதையும் மாற்றியமைக்கப்பட்டு, நெகிரி செம்பிலான் மாநிலமும் அந்தத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டதிலிருந்து இசிஆர்எல் மீது வணிக நிறுவனங்களும், குத்தகையாளர்களும் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.