கோலாலம்பூர் – மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இசிஆர்எல் (ECRL – East Coast Railway Link) எனப்படும் கிழக்குக் கரையோர இரயில் பாதை உடனடியாக வணிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முதல் கட்டமாக கிழக்குக் கரையோரங்களில் கடற்கரையோரங்களில் அமைந்திருக்கும் சிறிய தங்கும் விடுதிகள், சுற்றுலாத் தளங்கள், கூடுதல் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு இப்போதே தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக கிளந்தான் பாசிர் பூத்தே வட்டாரத்தில் உள்ள தோக் பாலி கடற்கரைகளில் அமைந்திருக்கும் தங்கும் விடுதிகள் இப்போதே கூடுதல் வசதிகளைக் கொண்ட கட்டுமானங்களைக் கட்டத் தொடங்கிவிட்டன.
மேலும் மீன்பிடித்தலை மையமாகக் கொண்ட இந்தப் பகுதியில் மீன்வளத் துறை தொடர்பான வணிகங்களும் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு வருகின்றன
பிரம்மாண்டமான கட்டுமானம் என்பதால் இசிஆர்எல் பல சிறிய, நடுத்தர குத்தகையாளர்களுக்கு புதிய குத்தகைகளையும், வணிக வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தையத் திட்டத்தில் உள்ளூர் குத்தகையாளர்களுக்கு 30 விழுக்காடு வழங்கப்பட வேண்டுமென நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இசிஆர்எல் திட்டத்தில் இந்த விழுக்காடு 40-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இசிஆர்எல் திட்டத்தைத் தொடர்ந்து கிழக்குக் கரை மாநிலங்களில் ஏற்படப் போகும் பொருளாதார நடவடிக்கைகளால் சிறிய, நடுத்தர வணிகங்கள் பெரும் பயனடையும் என்றும் கணிக்கப்படுகின்றது.
இசிஆர்எல் திட்டத்தின் இன்னொரு பலன் என்னவென்றால் பாஸ் ஆட்சி செய்யும் கிளந்தான், திரெங்கானு மாநில அரசியல் தலைவர்களும், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி செய்யும் நெகிரி செம்பிலான், சிலாங்கூர் அரசியல் தலைவர்களும், தேசிய முன்னணி-அம்னோ ஆட்சி செய்யும் பகாங் மாநில அரசியல் தலைவரும் இந்தத் திட்டத்தின் பலன்களுக்காக ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்து செயல்படத் தொடங்கியுள்ளனர்.
திட்டம் நிறைவு காணும்போது மேற்குக் கரையோர மாநிலங்களுக்கும் கிழக்குக் கரையோர மாநிலங்களுக்கும் இடையில் போக்குவரத்துத் துறையில் இருந்த பெரும் இடைவெளி கணிசமாக குறையும்.