Home உலகம் ஹாங்காங்கில் மீண்டும் பெரிதாக வெடிக்கும் போராட்டங்கள்

ஹாங்காங்கில் மீண்டும் பெரிதாக வெடிக்கும் போராட்டங்கள்

661
0
SHARE
Ad

ஹாங்காங் – தங்களின் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, கடுமையான கோபத்திற்கு உள்ளாகியிருக்கும் ஹாங்காங்கின் ஜனநாயகப் போராட்டவாதிகள், அந்நாட்டின் முக்கிய மையங்களில் ஆயிரக்கணக்கில் குழுமத் தொடங்கியுள்ளனர்.

சீன நாட்டின் பிரதிநிதித்துவ அலுவலகத் தலைமையகத்தைச் சுற்றி பாதுகாப்புகளை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் அதிகரித்துள்ளனர்.

சீன நாட்டின் எல்லையை ஒட்டிய யுவன் லோங் என்ற பகுதியில் தாக்குதல் நடத்தியது, ஆயுதங்கள் வைத்திருந்தது, சட்டவிரோதப் பேரணி ஆகிய காரணங்களுக்காக இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

யுவன் லோங் பகுதியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் சிலர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஒரு இரயில் நிலையத்தில் தாக்குதல்களை நடத்தினர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டவாதிகள் நேற்று சனிக்கிழமை காவல் துறையின் தடையை மீறி பேரணி ஒன்றை நடத்தினர்.

நேற்றைய ஆர்ப்பாட்டப் பேரணிகளின் போதும் இதே போன்று மோதல்கள் வெடித்தன. காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகள், இரப்பர் தோட்டாக்கள், பஞ்சு போன்ற வெடிகுண்டுகள் (sponge grenades) ஆகியவற்றைக் கொண்டு கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர்.

இதனால் 24 பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவர் கடுமையான காயங்களுக்குள்ளாகினர்.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை கறுப்பு உடையணிந்த ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹாங்காங் நகரின் மையப் பகுதிகள் குழுமத் தொடங்கியுள்ளனர்.

காவல்துறையினருக்கு எதிராக சுலோகங்களை முழக்கமிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், சில சாலைச் சின்னங்களின் பதாகைகளையும் சேதப்படுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டங்களை “மத்திய சீன அரசாங்கத்திற்கு எதிரான வெளிப்படையான போராட்டம்” என சீன அரசாங்கம் சாடியுள்ளது.

சீனாவின் பிரதிநிதியாகச் செயல்படும் ஹாங்காங் ஆட்சியாளர் கேரி லாம் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்கள் சீனாவின் பிரதிநிதித்துவ அலுவலகம் முன்பு குழுமத் தொடங்கியதைத் தொடர்ந்து அந்தக் கட்டிடத்தைச் சுற்றி பாதுகாப்புத் தடுப்பு வளையங்களை காவல் துறையினர் ஏற்படுத்தியுள்ளனர்.