லுமுட் – எதிர்வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் பங்கோர் விமான நிலையம் திறக்கப்பட்டு சேவைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், தீர்வையற்ற பகுதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் பங்கோர் தீவில் வணிக வாய்ப்புகள் மேலும் அதிக அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுப் பயணத் துறையும் பங்கோரில் மேலும் விரிவடையும்.
அடுத்த ஆண்டு முதல் பங்கோர் தீர்வையற்ற பகுதியாகச் செயல்படத் தொடங்கும்.
முதல் கட்டமாக எஸ்கேஎஸ் ஏர்வேய்ஸ் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் சுபாங் விமான நிலையத்திற்கும் பங்கோர் தீவிற்கும் இடையிலான விமான சேவைகளைத் தொடங்கும்.
அதே வேளையில் சுபாங்-ஈப்போ-சுபாங் விமான பயணச் சேவைகளையும் எஸ்கேஎஸ் ஏர்வேய்ஸ் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் தொடங்கவிருக்கின்றது.
1993-ஆம் ஆண்டில் பங்கோர் விமான நிலையம் முதன் முதலில் திறக்கப்பட்டது. எனினும் 2014-ஆம் ஆண்டில் அதன் சேவைகள் நிறுத்தப்பட்டன.
முதல் கட்டமாக பங்கோர் விமான நிலையத்தின் பாதுகாப்பு சேவைகள், இட வசதிகள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் போன்ற அம்சங்கள் மேம்படுத்தப்படும் என பேராக் அரசாங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பங்கோர் தீர்வையற்ற பகுதியாக அங்கீகரிக்கப்படுவது, விமான சேவைகள் தொடங்கப்படுவது ஆகியவற்றின் மூலம் அந்தத் தீவின் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்றும் சுற்றுப் பயணத் துறை விரிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், உணவு உற்பத்தியாளர்களும், உணவகங்களும் பங்கோரில் அதிகரிப்பர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.