Home உலகம் லீ குவான் இயூவின் பேரன் ஓரினத் திருமணம் புரிந்தார்

லீ குவான் இயூவின் பேரன் ஓரினத் திருமணம் புரிந்தார்

1146
0
SHARE
Ad
லீ ஹூவான் வூ (இடது) – அவரது ‘காதலர்’ ஹெங் யிருய்

கேப் டவுன் (தென் ஆப்பிரிக்கா) – ஓரினச் சேர்க்கைக்கும், ஓரினத் திருமணம் புரிவதற்கும் தடை விதித்துள்ள நாடு சிங்கப்பூர். அத்தகைய தடைகள் அந்நாட்டில் இன்றும் நீடித்திருப்பதற்கு மூலகாரணமாக இருந்தவர் அந்நாட்டின் தோற்றுநரும், முன்னாள் பிரதமருமான லீ குவான் இயூ.

ஆனால், காலமாற்றத்தின் கோலம், லீ குவான் இயூவின் பேரன் லீ ஹூவான் வூ (Li Huanwu) ஓரினத் திருமணம் புரிந்து கொண்டிருக்கும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அந்த திருமணம் நடைபெற்றிருப்பது சிங்கையில் அல்ல! தென்னாப்பிரிக்காவில்!

தனது ஆத்ம இணையான ஆண்மகன் ஒருவரை தென்னாப்பிரிக்க நகர் கேப்டவுனில் மணந்து கொண்டிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை (மே 24) தெரிவித்துள்ளார், லீ ஹூவான் வூவின் ‘காதலர்’ ஹெங் யிருய் (Heng Yirui)

#TamilSchoolmychoice

லீ ஹூவான் வூ, லீ குவான் இயூவின் மகன் லீ சியான் ஹாங்கின் புதல்வராவார். லீ சியான் ஹாங் நடப்பு சிங்கை பிரதமர் லீ சியன் லுங்கின் இளைய சகோதரராவார்.

எல்ஜிபிடி (LGBT – lesbian, gay, bisexual and transgender) எனப்படுவது பெண்கள், ஆண்களுக்கிடையிலான ஓரினச் சேர்க்கை, ஈரினச் சேர்க்கை மற்றும் திருநங்கைகள் தொடர்பிலான அம்சங்களுக்கு ஆதரவு தரும் இயக்கமாகும். இந்த இயக்கம் உலகம் எங்கிலும் ஓரினச் சேர்க்கையும், ஓரினத் திருமணமும் அங்கீகரிக்கப் பாடுபட்டு வருகிறது. சிங்கையில் எல்ஜிபிடி இயக்கத்திற்கு ஆதரவான மற்றொரு அரசு சார்பற்ற இயக்கம் பிங்க் டோட் சிங்கப்பூர் (Pink Dot Singapore) என்பதாகும்.

பிங்க் டோட்டின் இணைய அகப்பக்கத்திற்கு தங்களின் திருமணப் புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளனர் லீ ஹூவான் வூ மற்றும் ஹெங் யிருய் ஆகிய இருவரும்!

ஓரினச் சேர்க்கையும், ஓரினத் திருமணமும் அங்கீகரிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஆசியாவில் தைவான், ஆப்பிரிக்கக் கண்டத்தில் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளும் அடங்கும். தென் ஆப்பிரிக்காவில் கூட அண்மையில்தான் இதற்கான சட்டம் அமுலாக்கப்பட்டிருக்கிறது.