Home இந்தியா இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் – யார் இந்தத் தமிழர்?

இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் – யார் இந்தத் தமிழர்?

1652
0
SHARE
Ad
நேற்று வெள்ளிக்கிழமை முதல் நாளாக தனது அதிகாரபூர்வ பணிகளை ஜெய்சங்கர் தொடங்குகிறார்…

புதுடில்லி – (இந்தியாவின் புதிய வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர் சுப்பிரமணியம் என்பவரை நரேந்திர மோடி நேற்று நியமித்திருப்பதைத் தொடர்ந்து – யார் இவர்? அரசியல் பின்னணி எதுவும் இல்லாமல் எப்படி திடீரென அமைச்சரானார் – என்பது போன்ற கேள்விகளோடு,  உலகம் முழுவதிலுமே கண்கள் விரிய இவரை உற்று நோக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு தமிழரான ஜெய்சங்கர் சுப்பிரமணியத்தின் பின்னணி என்ன – அவருக்கும் மோடிக்கும் நெருக்கம் ஏற்பட்டது எப்படி? தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திர மோடி பதவி வகித்தபோது, சீனாவுக்கு வணிகம், தொழில்கள் ஈர்ப்பது தொடர்பில் அதிகாரபூர்வ வருகை ஒன்றை மேற்கொண்டார்.

இந்திய அரசியலை அறிந்தவர்களுக்கு, இந்தியாவின் மாநில முதல்வர் ஒருவர் இன்னொரு நாட்டிற்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொள்வது அவ்வளவு சுலபமானதல்ல என்பது தெரியும். அதிலும் அப்போது ஆட்சியில் இருந்தது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி!

மோடியுடன் சந்திப்பு ஒன்றில்….
#TamilSchoolmychoice

மோடியின் சீனாவின் வருகையின் போது அப்போது சீனாவுக்கான இந்தியத் தூதராக இருந்தவர் ஜெய்சங்கர் சுப்பிரமணியம். மோடியின் சீன வருகையை சிறப்பான முறையில் வடிவமைத்து, ஏற்பாடுகள் செய்து மோடியின் கவனத்தையும், பாராட்டையும் பெற்றார் ஜெய்சங்கர்.

காலச் சக்கரம் சுழன்றது!

2014-ஆம் ஆண்டில் அதே நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரானபோது அமெரிக்காவுக்கான முதல் வருகையை மேற்கொண்டார். அப்போது அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்தவர் இதே ஜெய்சங்கர்தான்! 2013-ஆம் ஆண்டில்தான் அமெரிக்காவின் தூதராக நியமனம் பெற்றிருந்தார் ஜெய்சங்கர்.

அதுவரையில் மோடிக்கு அமெரிக்காவில் நுழைவதற்கான குடிநுழைவு அனுமதியே (விசா) கிடையாது. மோடிக்கு விசா ஏற்பாடுகளை அதிகாரபூர்வமாக செய்து முடித்து, மோடியின் அமெரிக்க வருகையைச் சிறப்பாகக் கையாண்டு, மீண்டும் ஒருமுறை மோடியின் பாராட்டுகளுக்கு உள்ளானார் ஜெய்சங்கர்.

அதிலும், அமெரிக்காவில்தான் முதன் முறையாக இலட்சக்கணக்கான அயல்நாட்டு இந்தியர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு இந்தியப் பிரதமராக மோடி உரையாற்றும் நடைமுறையை உருவாக்கி, வெளிநாட்டுப் பயணங்களில் ஒரு புதிய பாணி உருவாக மோடிக்கு துணை நின்றார் ஜெய்சங்கர். அதே பாணியிலான நடைமுறை பின்னர் மோடி, சென்ற மற்ற நாடுகளிலும் பின்பற்றப்பட்டது.

தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறைக்கு செயலாளராகப் பொறுப்பேற்றார் ஜெய்சங்கர். இந்த காலகட்டத்தில் பிரதமராக இருந்தவர் சொல்லத் தேவையில்லை – நரேந்திர மோடிதான்!

இந்திய வெளியுறவு அரசியல் சூட்சுமங்கள் அறிந்தவர்களுக்கு ஒன்று தெரிந்திருக்கும். யார் ஒருவர் பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தூதராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவரோ அவரே அநேகமாக இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படுவார். அந்த வகையில் சீனாவில் – சுமார் நான்கரை ஆண்டுகளுக்கு தூதராகப் பணியாற்றி – மிக நீண்ட காலமாக சீனாவில் இந்தியத் தூதராகப் பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றவர் ஜெய்சங்கர்.

அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்

‘மீண்டும் வந்ததற்கு வாழ்த்துகள்’ – ஜெய்சங்கரை அமைச்சராக வரவேற்கும் நடப்பு இந்திய வெளியுறவு செயலர் விஜய் கோகலே…

மோடியின் முதல் தவணை ஆட்சியில் வெளியுறவுத் துறை செயலராகப் பணியாற்றி மோடியின் நன்மதிப்பைப் பெற்ற ஜெய்சங்கர், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் (ஜனவரி 2018-இல் ஓய்வு பெற்றார்) அரசாங்கப் பதவியிலிருந்து ஓய்வு பெற்று, டாட்டா நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார்.

அவரது திறமை, அயல்நாட்டுக் கொள்கைகளில் அவருக்கிருக்கும் அபார அறிவாற்றல் போன்ற காரணங்களுக்காக அவரைத் தனது அமைச்சரவையில் இணைத்திருக்கிறார் மோடி.

சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இந்தியாவுக்கு இருக்கும் பிரச்சனைகள், வங்காளதேசத்துடன் நிலவி வரும் எல்லைப்புறப் பிரச்சனைகள், அமெரிக்காவுடன் நல்லுறவை வளர்க்க வேண்டியக் கட்டாயம், அதே நேரத்தில் நீண்டகால நட்பு நாடான ரஷியாவுடன் நட்புறவை சமன்நிலைப்படுத்த வேண்டிய அத்தியாவசியம், புதிதாக முளைத்திருக்கும் அமெரிக்கா-சீனா வணிகப் போர் என பலமுனைகளில் வெளிநாட்டு உறவை பலப்படுத்த வேண்டிய சூழலில் இருக்கும் இந்தியாவுக்கு ஜெய்சங்கரின் பரந்த அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும்.

தமிழ் நாட்டுக்காரர்

1955-இல் டில்லியில் பிறந்த தமிழ் நாட்டுக்காரரான ஜெய்சங்கரின் தந்தை கே.சுப்பிரமணியன் இந்திய அரசுத் துறையில் முக்கியத் துறைகளில் பணியாற்றியவர். ஜெய்சங்கரின் சகோதரர் எஸ்.விஜயகுமாரும் இந்திய அரசாங்கத்தில் உயர்பதவிகளில் பணியாற்றியவர். மற்றொரு சகோதரர் சஞ்சய் சுப்பிரமணியன் ஒரு வரலாற்று ஆய்வாளர்.

டில்லிப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற ஜெய்சங்கர் பின்னர் அரசியல் அறிவியலிலும், அனைத்துலக உறவுகள் துறையிலும் முதுகலைப் பட்டம் பெற்றார். அனைத்துலக உறவுகள் துறையில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். 1977-ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவுத் துறையில் பணிக்கு சேர்ந்தார்.

இலங்கைக்கான இந்திய அமைதிப் படையின் அரசியல் ஆலோசகர்

ஜெய்சங்கரின் வெளியுறவுத் துறை பணிகளில் சில சர்ச்சைப் பக்கங்களும் உண்டு. 1988-ஆம் ஆண்டில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைக்கும் இடையில் போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப் படையின் அரசியல் ஆலோசகராகச் செயல்பட்டவரும் இதே ஜெய்சங்கர்தான்!

இடைப்பட்ட காலத்தில் இந்திய அதிபராக சங்கர் தயாள் சர்மா பதவி வகித்தபோது அவருக்குப் பத்திரிக்கைச் செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார் ஜெய்சங்கர்.

மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில் கூட ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்ற ஆரூடங்கள் எழுந்தன. ஆனால் பின்னர் அவை அடங்கிப் போயின.

இவரின் மனைவி குயோக்கோ ஜெய்சங்கர். ஆம்! அவர் ஒரு ஜப்பானியப் பெண்மணி. இவர்களுக்கு இரண்டு புதல்வர்களும் ஒரு புதல்வியும் உண்டு.

ஆங்கிலம், இந்தி, தமிழ் உட்பட ரஷியன், மாண்டரின், ஜப்பானிய, ஹங்கேரிய மொழிகளையும் அறிந்தவர் ஜெய்சங்கர்.

அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை வடிவமைப்பதிலும், மோடியுடன் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு இந்தியா சார்பில் பேச்சு வார்த்தைகள் நடத்துவதிலும் ஜெய்சங்கரின் உழைப்பும், அனுபவமும் பெரிதும் உதவும்!

-இரா.முத்தரசன்