சென்னை – உலகின் பல நாடுகளில் 24 மணி நேர கடைகள் வணிகங்கள் என்பது சர்வ சாதாரணமான ஒன்று. மலேசியாவிலும் அவ்வாறு பல கடைகள், உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.
ஆனால், தமிழகத்தில் இதுவரை அத்தகைய நடைமுறை பின்பற்றப்பட்டது இல்லை. இனி தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படலாம் என வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசின் புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் பணியாளர்களுக்கு 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபட அனுமதி உண்டு. இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் பணிபுரிவதாக இருந்தால், நிறுவனங்கள் அவர்களிடமிருந்து அதற்கான முன் அனுமதியைப் பெறவேண்டும்.
இரவு 8.00 மணி முதல் காலை 6.00 மணி வரை பெண்கள் வேலை செய்வதாக இருந்தால் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்புகள் வழங்கப்பட வேண்டும்.
இந்த முடிவினால் இனி இரவு முழுவதும் அல்லது அதிகாலையில் திரைப்படங்கள் திரையிடப்படலாம். இதனால் திரையரங்குகளின் வருமானமும், திரைப்படங்களின் வசூலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பெரிய படங்களுக்கு மட்டுமே அதிகாலைக் காட்சிகளுக்கான சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது.
உணவகங்களும் அதிக நேரம் திறந்திருக்க முடியும் என்பதால், இனி தொழில் வளர்ச்சியும், வணிக வருமானமும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.