
சென்னை – எந்தவிதச் சினிமாப் பின்னணியும் இல்லாமல் கோடம்பாக்கத்தில் நுழைந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடித்து அண்மையில் வெளியான இராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களும் சுமாரான வெற்றியைப் பெற்றன.
ஏற்கனவே திருமணம் ஆகி மணமுறிவு பெற்ற விஷ்ணுவிஷால் நடிகை அமலா பால் இருவரும் நெருக்கமாகப் பழகி வருகின்றனர் என்றும் திருமணம் புரிந்து கொள்ளப் போகின்றனர் அண்மையில் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இருவரும் அதனை உறுதிப்படுத்தவில்லை.
இதற்கிடையில், பூப்பந்து விளையாட்டில் நாட்டில் முன்னணி விளையாட்டாளராகத் திகழும் ஜூவாலா கட்டா என்பவர்தான் தற்போது விஷ்ணு விஷாலுடன் நெருக்கமாகப் பழகி வருகிறார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அழகும், கவர்ச்சியும் மிகுந்த பூப்பந்து விளையாட்டு வீராங்கனை ஜூவாலா கட்டா ஏற்கனவே திருமணம் புரிந்து விவாகரத்து பெற்றவர்.
இதுகுறித்து இந்தியாவின் ஊடகம் ஒன்றுக்கு விடுத்த செய்தியில் “நானும் ஜூவாலாவும் சிறந்த நண்பர்கள். நெருக்கமாகப் பழகி வருகிறோம். எங்களுக்கிடையே பொதுவான நண்பர்களும் பலர் இருப்பதால் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து வருகிறோம். எங்களுக்கிடையே நட்பையும் தாண்டி நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. அதே சமயம், எங்களுக்கு தொழில் ரீதியாக நிறைய வேலைகள் இருக்கின்றன என்பதையும் நாங்கள் உணர்ந்துள்ளோம். எனவே எங்களின் அடுத்தகட்டம் என்ன என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை” என்றும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.