கோலாலம்பூர்: பிரதமர் மகாதீரின் தான் என்ற அகங்காரம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது என மசீச உதவித் தலைவர் டான் தெய்க் செங் கூறியுள்ளார்.
மகாதீரின் ஒருதலைப்பட்சமான இந்த முடிவினை எதிர்த்து அமைச்சரவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பாததும், அமைதிக் காத்து வருவதும், அவர்கள் மக்களுக்கு செய்து கொடுத்த வாக்குறுதியை மீறுவதாக அமைகிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவரை நியமிப்பதில் பிரதமர் மகாதீர் முகமட் அமைச்சரவையில் கலந்து ஆலோசிக்கவில்லை என அண்மையில் கூறியிருந்தார். அதற்கு பிறகு, பல்வேறு தரப்பினர் குறிப்பாக அரசியல் தலைவர்கள் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
மகாதீரின் சர்வாதிகாரி போக்கும், குடும்ப அரசியலும் மீண்டும் தலைத்தூக்கி உள்ளதாக டான் குறிப்பிட்டுள்ளார். இந்த செயல்முறை நாட்டிற்கும் , நாட்டு மக்களுக்கும் கேடினை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், இன்று வெள்ளிக்கிழமை ஊழல் தடுப்பு ஆணையப் பொறுப்பினை ஏற்றுள்ள லத்தீஃபா கோயா கூறுகையில், தாம் தமக்கு விதிக்கப்பட்ட பணிகளை சரிவரச் செய்து, இந்நாட்டில் அனைத்து வகையான ஊழல்களையும் துடைத்தொழிக்க உள்ளதாக உறுதி அளித்துள்ளார்.