கோலாலம்பூர், ஏப்ரல் 3 – தனியார் துப்பறிவாளர் பி.பாலாவின் மனைவி செந்தமிழ் செல்வி மற்றும் அவரது குழந்தைகளை நேற்று முதல் காணவில்லை என்று பாலாவின் வழக்கறிஞரான அமெரிக் சிடு தெரிவித்துள்ளார்.
பாலா தனது முதல் சத்தியப் பிரமாணத்தைப் பதிவு செய்ய, வழக்கறிஞர்கள் அவருக்கு பணம் கொடுத்தார்கள் என்று செல்வி கடந்த சனிக்கிழமையன்று காவல்துறையில் புகார் செய்ததாக உலவிய குறுஞ்செய்திக்குப் பிறகு, சில பத்திரிக்கைகளும், காவல்துறையினரும் செல்வியிடம் அதுபற்றி விசாரிக்க அவரது வீட்டில் குவிந்தனர்.
எனவே, பாலா பணம் வாங்கினார் என்று ஒப்புக்கொள்ளும்படி அவரது மனைவியான செல்வி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அமெரிக் சிடு தனது பயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அமெரிக் சிடு கூறுகையில்,
“கடந்த திங்கட்கிழமை, செல்வி அறிக்கை ஒன்றை வெளியிடப்போவதாகக் கூறி இரு பத்திரிக்கையாளர்கள் அவரை சந்தித்துள்ளனர்.ஆனால் செல்வி அதை மறுத்துள்ளார். அதன் பின் அவர்கள் ஒரு கருப்பு நிற காரில் அமர்ந்து கொண்டு செல்வியின் வீட்டை தூரத்தில் இருந்தபடியே படமெடுத்துள்ளனர்.
இந்நிலையில்,நேற்று காலை 10.15 மணியளவில் செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் அவர்கள் வீட்டிலிருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
அதன் பின், செல்வியை நேற்று முழுவதும் தேடியும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது” என்று அமெரிக் சிடு தெரிவித்துள்ளார்.