ஜோகூர் பாரு, ஏப்ரல் 3 – ஜோகூர் மாநிலத்தின் பத்து பகாட் நாடாளுமன்ற தொகுதியின் பிகேஆர் கட்சி வேட்பாளராக இட்ரிஸ் ஜவ்சி போட்டியிடுவார் என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அறிவித்துள்ளார்.
நேற்று ஜோகூர்பாருவில் உள்ள கம்போங் டத்தோ சுலைமான் மெந்திரி என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மக்கள் கூட்டணி தலைவர்களோடு கலந்து கொண்டு உரையாற்றிய அன்வார் இப்ராகிம் இந்த அறிவிப்பைச் செய்தார்.
அரசாங்க சார்பற்ற அமைப்புக்களில் நீண்டகாலமாக ஈடுபாடுடைய இட்ரிஸ் ஜவ்சி அபிம் (ABIM) என்ற அங்காத்தான் பெலியா இஸ்லாம் மலேசியா (Angkatan Belia Islam Malaysia) இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் முன்னாள் தலைவராவார்.
இந்த அபிம் அமைப்பு அன்வார் இப்ராகிம் மலாயாப் பல்கலைக் கழகத்தில் மாணவர் தலைவராக இருந்தபோது அவரால் தொடங்கப்பட்ட அமைப்பு என்பதும் ஆரம்ப காலங்களில் அதன் தலைவராக அன்வார் இப்ராகிம் செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பின்னர் அன்வார் இப்ராகிம் தேசிய முன்னணி அரசில் அமைச்சராக இருந்தபோது அன்வாருடன் நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்த இட்ரிஸ் ‘பீரோ டாட்டா நெகாரா’ (Biro Tata Negara) என்ற அரசாங்க அமைப்பின் துணை தலைமை இயக்குநராக பணியாற்றினார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிகேஆர் கட்சி சார்பாக பலம் வாய்ந்த, அனுபவம் பெற்ற, அதே வேளையில் தனக்கு நெருக்கமான – தனது நம்பிக்கையைப் பெற்ற ஆதரவாளர்களை அன்வார் வேட்பாளர்களாக அறிவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
துணைக் கல்வி அமைச்சரின் தொகுதி
கடந்த 2008 பொதுத் தேர்தலில் பத்து பகாட் தொகுதியில் அம்னோ-தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டத்தோ முகமட் புவாட் சர்காஷி (படம்) 12,968 வாக்குகள் பெரும்பான்மையில் பிகேஆர் வேட்பாளரைத் தோற்கடித்தார்.
நடப்பு பத்து பகாட் நாடாளுமன்ற உறுப்பினராக முகமட் புவாட் சர்காஷி கலைக்கப்பட்ட தேசிய முன்னணி அமைச்சரவையில் துணை கல்வி அமைச்சராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் 88,461 வாக்காளர்களைக் கொண்டிருக்கும் பத்து பகாட் தொகுதியில் மலாய்க்கார வாக்காளர்கள் 52 சதவீதம் உள்ளனர். சீனர்கள் 46 சதவீதமும் மற்றவர்கள் 1 சதவீதமும் இந்த தொகுதியில் வாக்காளர்களாக உள்ளனர்.