கோலாலம்பூர்: தேசிய முன்னணி கட்சிகளிடையே நிச்சயமற்ற, குழப்பமான நிலை இருப்பதால், மஇகா, மசீச கட்சிகள் எடுக்கும் முடிவுகளில் கவனம் இருக்க வேண்டும் என்று அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் முகமட் புவாட் சர்காஷி தெரிவித்தார்.
உண்மையான நிலைமையை உணராமல் புதிய இடத்தைத் தேடிச் செல்வதற்கு மஇகா, மசீச அவசரப்படக்கூடாது என்று புவாட் கூறினார்.
பெர்சாத்து மற்றும் தேசிய கூட்டணி உடனான ஒத்துழைப்பைத் தொடரும் போக்கை இவ்விரு கட்சிகளும் கொண்டிருப்பதாக கூறிய புவாட், அக்கூட்டணியில் ‘முக்கியத்துவம்’ என்ற கருத்து இல்லை என்ற குற்றச்சாட்டை சந்தேகிப்பதாகக் கூறினார்.
அத்தகைய உணர்வு இல்லை என்பது உண்மை என்றால், அம்னோ நிச்சயமாக அவர்களுடன் இணைந்து செயல்பட்டிருக்கும் என்று புவாட் கூறினார்.
“ஆனால், தேசிய கூட்டணியில் ‘முக்கியத்துவம்’ இல்லையா? ‘நாங்கள் சகோதரர்கள்’ (நாம் அனைவரும் சகோதரர்கள்) என்ற கருத்து தேசிய கூட்டணி அரசாங்கத்தில் உள்ளது என்பது உண்மையா? தேசிய கூட்டணியில் முக்கியத்துவங்கள் குறிப்பிட்ட தரப்புக் அளிக்கப்படவில்லை என்றால், நிச்சயமாக அம்னோ தேசிய கூட்டணியுடன் இணைந்திருக்கும். அரசாங்கத்தை விட்டு வெளியேற முற்படாது. மாறாக, அம்னோ ஒரு மாற்றாந்தாய் போலவே கருதப்படுகிறது,” என்று அவர் கூறினார்.