ஷா அலாம்: குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் சுமைகளை குறைப்பதில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது என்பதை பறைசாற்றும் வகையில் தேசிய சுகாதாரத் திட்டமான, மைசலாம் (MySalam) திகழ்கிறதாக 38 வயதுடைய நாஸ்ருல் இஷாக் பெர்னாமாவிடம் கூறினார்.
தற்காலத்தில் மருத்துவமனை மற்றும் மருந்து சிகிச்சை செலவினங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து அரசாங்கம் இந்த முன்முயற்சியைக் கையாண்டுள்ள விதம் வரவேற்கத்தக்கது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“என்னை போன்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இருதய நோய் போன்றவைகளுக்கு இந்த திட்டத்தின் வாயிலாக எளிதாக சிகிச்சைப் பெற முடிகிறது” என்று அவர் கூறினார்.
கடந்த ஜனவரி 24-ஆம் தேதி பிரதமர் மகாதீர் முகமட் மைசலாம் திட்டத்தை தொடக்கி வைத்தார். கிரேட் ஈஸ்டேர்ன் தாகாபுல் பெர்ஹாட் காப்புறுதி நிறுவனத்துடன் இணைந்து அரசாங்கம் இந்த முயற்சியில் இறங்கியது.
இத்திட்டத்தின் வாயிலாக புற்று நோய் மற்றும் இருதய நோய் உள்ளிட்ட 36 முக்கியமான நோய்கள் இருப்பது கண்டறியப்பட்டால் 8,000 ரிங்கிட் வரையிலும் காப்புறுதி வழங்கப்படுகிறது. மேலும், மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சைப் பெறுவதற்கு தினமும் 50 ரிங்கிட் வரையிலும் உதவியாகத் தரப்படுகிறது. ஒரு வருடத்திற்கு சுமார் 700 ரிங்கிட் வரையிலும் மக்கள் உதவித் தொகையைப் பெறலாம்.
18 வயதிலிருந்து 55 வயதுக்குட்பட்ட பிஎஸ்எச் உதவியைப் பெறுபவர்கள் மைசலாம் திட்டத்தின் வாயிலாக பலனடையலாம்.