Home நாடு 45,000 பள்ளி துப்புரவு பணியாளர்கள் வேலை இழக்கப் போவது உண்மையாகி கொண்டிருக்கிறது!

45,000 பள்ளி துப்புரவு பணியாளர்கள் வேலை இழக்கப் போவது உண்மையாகி கொண்டிருக்கிறது!

936
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அண்மையில், கல்வி அமைச்சின் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 45,000 பள்ளி துப்புரவு பணியாளர்கள் வேலை இழக்கப்போவதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

கல்வி அமைச்சின் புதிய ஒப்பந்தத்தினால் இவர்கள் அனைவரும் வேலை இழக்கும் சூழல் ஏற்பட உள்ளதாக பூமிபுத்ரா குத்தகையாளர் அமைப்பின் (திடமான கழிவு மற்றும் துப்புரவு சேவை) செயலாளர் (கோஸ்ப்பெம்அக்ராம் ஷா ஹானிஷா அப்போது குறிப்பிட்டிருந்தார்.

ஆயினும், கடந்த மார்ச் மாதம் பஹாங் மாநில கோஸ்ப்பெம் எழுப்பிய இதே போன்ற குற்றச்சாட்டுகளை கல்வி அமைச்சு மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

தற்போது, இவ்வாறான பணிகளை மட்டும் நம்பி குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்த 30 பேருக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள பள்ளிகளிலுருந்து வேலையில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நான்கு குழந்தைகளுக்கு அப்பாவான எம். கனேசன், தன் மனைவிக்கும் வேலை போனதைப் பற்றி மலேசியாகினியிடம் கூறினார்.

ரவாங்கில் அமைந்துள்ள தாசெக் புத்ரி 2 தேசிய ஆரம்பப் பள்ளியில் பணிப்புரியும் கணவன் மனைவி இருவரையும் கடந்த மே 30-ஆம் தேதியோடு வேலையிலிருந்து விலகிக் கொள்ளுமாறு அப்பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்ததாகக் கூறினார். புதிய குத்தைகையாளர் நியமிக்கப்பட்டதால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று அவர் கூறியதாகவும் கனேசன் கூறினார்.

நீதியற்ற முறையில் திடீரென தங்களை வேலையை விட்டு வெளியேற சொன்னது குறித்து நேற்று வியாழக்கிழமை தொழில் உறவுகள் சட்டப் பிரிவு 20 கீழ் மனு ஒன்றை இவர்கள் அனைவரும் தாக்கல் செய்தனர்.

மேலும், இந்த முடிவானது மாநில கல்வி இலாகா மற்றும் கல்வி அமைச்சின் கீழ் செயல்படுத்தப்பட்டதாகவும், கூடிய விரைவில் இது குறித்து தெரிவிக்கப்படும் என்றும் அவரவர் தலைமையாசிரியர்கள் கூறியதாக அவர்கள் கூறினர்.

கோத்தா டாமான் சாரா செக்‌ஷன் 4 இடை நிலைப்பள்ளி, எங்கு ஹுசென் இடை நிலைப்பள்ளி, தேசிய வகை தெலோக் டத்தோ தமிழ்ப்பள்ளி, தேசிய வகை பத்து 11 செராஸ் சீனப்பள்ளி, தேசிய வகை பத்து 9 செராஸ் தமிழ்ப்பள்ளி மற்றும் தேசிய வகை சுங் ஹுவா சீனப்பள்ளி ஆகியவை தற்போதைக்கு இந்த வேலை நிறுத்தம் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.

சிலாங்கூர் ஐஆர்டி இயக்குனர் அனிதா அகமட் இது குறித்து கூறுகையில், அனைத்து 30 பேருடைய மனுக்களையும் பதிவு செய்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார். ஜூலை மாதத்தில் இவர்களுக்கிடையிலான சந்திப்புக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.