Home நாடு ஓரினச் சேர்க்கை காணொளி – அம்னோவின் அடாம் லோக்மான் – மஇகாவின் கோபாலகிருஷ்ணன் கைது

ஓரினச் சேர்க்கை காணொளி – அம்னோவின் அடாம் லோக்மான் – மஇகாவின் கோபாலகிருஷ்ணன் கைது

1406
0
SHARE
Ad

காஜாங் – அம்னோவின் போர்க்குரலாக ஒலித்து வரும் அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் இன்று இரவு 7.30 மணியளவில் காஜாங்கில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.

பிகேஆர் சந்துபோங் இளைஞர் பகுதித் தலைவரும் துணையமைச்சர் ஒருவரின் முன்னாள் செயலாளருமான முகமட் ஹசிக் அப்துல் அசிஸ், ஓரினச் சேர்க்கை காணொளியில் இருந்தது நான்தான் எனவும் தன்னுடன் இருந்தது பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி என்றும் கூறியிருந்தது தொடர்பில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் விவகாரத்தில் காவல் துறையில் வாக்குமூலத்தை லோக்மான் இன்று வழங்கினார்.

லோக்மான் நூர் அடாம் வாக்குமூலம் வழங்கிய சில மணி நேரங்களுக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார் என அவரது சிறப்பு அதிகாரி பைசுல் அலி அனுய்  உறுதிப்படுத்தியதாக பிரி மலேசியா டுடே இணையத் தளத்தின் செய்தி தெரிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

எனினும் காவல் துறையினர் இன்னும் அந்தச் செய்தியை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

கோபாலகிருஷ்ணன்

லோக்மானோடு, மஇகா உறுப்பினரும், பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவருமான என்.கோபாலகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டதாக பைசுல் அலி அனுய் தெரிவித்திருக்கிறார்.

கோபாலகிருஷ்ணன் பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமாவார்.

லோக்மான் கைது செய்யப்பட்டபோது அவரது வீட்டில் இருந்த கோபாலகிருஷ்ணன், காவல் துறையினர் தங்களின் கடமைகளை ஆற்றுவதற்கு இடையூறு செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டார் என நம்பப்படுகிறது.