கோலாலம்பூர் : அம்னோ கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான லோக்மான் அடாமுக்கு நீதிமன்ற அவமதிப்புக்காக ஒரு மாத சிறைவாசம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 15) அவருக்கு அந்த தண்டனையை விதித்தது.
முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீதான 1எம்டிபி வழக்கு தொடர்பில் தெரிவித்த கருத்துகளுக்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு லோக்மான் அடாம் மீது தொடரப்பட்டிருந்தது. அவரது கருத்துகள் சாட்சிகளுக்கு மிரட்டலாக அமைந்தன என்றும் அரசாங்கத் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சமர்ப்பித்த கோபால் ஸ்ரீராம் தெரிவித்திருந்தார்.
அந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி கொலின் செகுயிரா லோக்மான் அடாம் நீதிமன்ற அவமதிப்பு செய்தது தெளிவாகி இருக்கிறது எனக்கூறி அவருக்கான தண்டனையை அறிவித்தார்.
எனினும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப் போவதாக லோக்மான் அடாமின் வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து நீதிபதி, லோக்மான் மீதான சிறைத் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரைக்கும் ஒத்திவைத்தார்.
லோக்மான் தனிநபர் உத்தரவாதத்துடன் கூடிய 3,000 ரிங்கிட் பிணைப்புப் பத்திரத்தை (பாண்ட்) சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.