Home நாடு சிலாங்கூர் : 12 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

சிலாங்கூர் : 12 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

532
0
SHARE
Ad

ஷா ஆலாம் : சிலாங்கூர் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 12 விழுக்காட்டினர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுவிட்டதாக மாநில மந்திரி புசார் அமிருடின் ஷாரி தெரிவித்திருக்கிறார்.

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரையில் 2.3 மில்லியன் தடுப்பூசிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் செலுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இதுவே மிக அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்ட மாநிலம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மத்திய அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகளில் 78 விழுக்காட்டை சிலாங்கூர் மக்களுக்கு செலுத்தி விட்டதாகவும் எஞ்சியிருக்கும் 618 ஆயிரம் தடுப்பூசிகள் அடுத்த ஏழு நாட்களில் மாநிலத்தின் வெவ்வேறு மையங்களில் மக்களுக்குப் போடப்படும் என்றும்அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

தற்போதைய புள்ளிவிவரங்களின்படி நாளொன்றுக்கு 115 ஆயிரம் அளவைகள்  கொண்ட தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

மாநிலங்களைப் பொறுத்தவரையில கொற்றுகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகம் கொண்ட மாநிலமாக சிலாங்கூர் இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 6,120 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்திருக்கிறது. இதன் மூலம் 6 ஆயிரத்தைக் கடந்த தொற்றுகளைக் கொண்ட முதல் மாநிலமாக சிலாங்கூர் இருக்கிறது.

தினமும் பதிவாகும் மொத்த தொற்றுகளில் ஏறத்தாழ பாதி எண்ணிக்கையிலான தொற்றுகள்  சிலாங்கூரில் பதிவாகியிருக்கின்றன.