கோலாலம்பூர் : பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என அவர் மீது பொதுவழக்கு (சிவில்) ஒன்றை அன்வாரிடம் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார்.
யூசுப் ராவுத்தர் ஏற்கனவே தொடுத்த காவல்துறை புகார்கள் விசாரிக்கப்பட்டு, அன்வார் மீது குற்றவியல் வழக்கு தொடுக்க போடுமான ஆதாரங்கள் இல்லை என சட்டத்துறை அலுவலகம் ஏற்கனவே அறிவித்து விட்டது.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து யூசுப் இராவுத்தர் பொது வழக்காக நீதிமன்றத்தில் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கில் அக்டோபர் 2018 முதற்கொண்டு அன்வார் அவரின் சிகாம்புட் இல்லத்தில், தன்மீது பாலியல் தொந்தரவுகள் கொடுத்து வந்தார் என தெரிவித்திருக்கிறார்.
தனது புகார்களை யூசுப் ராவுத்தர் ஒரு சத்திய பிரமாண ஆவணமாக கடந்த ஆண்டு நவம்பரில் பகிரங்கமாக வெளியிட்டார். அதைத் தொடர்ந்து தற்போது அவர் இந்த வழக்கை தொடுத்திருக்கிறார்.