Home வணிகம்/தொழில் நுட்பம் அமெரிக்கத் தடையால் 30 பில்லியன் டாலர் வருமானத்தை வாவே இழக்கலாம்

அமெரிக்கத் தடையால் 30 பில்லியன் டாலர் வருமானத்தை வாவே இழக்கலாம்

1047
0
SHARE
Ad

ஷென்சென் – சீனாவின் ஷென்சென் நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வாவே நிறுனத்திற்கு (Huawei) எதிராக அமெரிக்கா கறுப்புப் பட்டியலிட்டு விதித்திருக்கும் தடைகளால் அந்நிறுவனம் தனது விற்பனை மூலம் ஈட்டுவதற்குத் திட்டமிட்டிருந்த வருமானத்தில் சுமார் 30 பில்லியன் டாலர்களை அடுத்த சில ஆண்டுகளில் இழக்கலாம் என அறிவித்திருக்கிறது.

எனினும் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டுக்குமான தங்களின் விற்பனை வருமானம் 100 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என வாவேயின் தோற்றுநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ரென் செங்ஃபெய் இன்று திங்கட்கிழமை வாவே தலைமையகத்தில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் கூறினார்.

அமெரிக்க அனுமதி பெறாமல் வாவே நிறுவனத்திற்கு தொழில்நுட்ப அம்சங்களை விற்பனை செய்யக்கூடாது என்ற விதியோடு அமெரிக்காவால் கறுப்புப் பட்டியலிடப்பட்டிருப்பதால் வாவே நிறுவனம், அமெரிக்க-சீனா வணிக மோதலின் மையப் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த 10 ஆண்டுகளாகவே இதுபோன்ற அமெரிக்கத் தடைகளை எதிர்நோக்கிய போதும் வாவே உலகின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு கருவிகளுக்கான தயாரிப்பாளராக வளர்ச்சி பெற்றதோடு, திறன்பேசிகளைத் (ஸ்மார்ட்போன்) தயாரிக்கும் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நிறுவனமாகவும் வாவே உருவெடுத்தது.

இந்த ஆண்டு இறுதிக்குள் உலகின் மிகப் பெரிய திறன்பேசி தயாரிப்பாளரான சாம்சுங்கை முந்தி விடுவோம் என அறிவித்திருந்த வாவே தற்போது அந்த இலக்கைக் கைவிட்டுள்ளது.