புது டில்லி: 5-வது அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அவரது, தலைமையில் 30,000 பேர் கலந்து கொண்டு யோகா செய்தனர். வெளிநாடு வாழ் இந்தியர்களும் அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
“உலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா. யோகாவை இன்று உலகமே கொண்டாடுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு யோகா சிறந்த மருந்தாக உள்ளது. அமைதியான உலகை உருவாக்குவதில் யோகா முக்கிய பங்கு வகுக்கிறது. இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக யோகா விளங்குகிறது.” என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
உலக வாழ் அனைவருக்கும் யோகா தின வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், அனைத்துலகளவில் யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்றோருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.