Home கலை உலகம் டான்ஸ்ரீ சோமா கலை அறவாரியத்தின் மற்றொரு பிரமாண்ட படைப்பு தஞ்சை கமலா இந்திரா வழங்கும் ‘தில்லானா...

டான்ஸ்ரீ சோமா கலை அறவாரியத்தின் மற்றொரு பிரமாண்ட படைப்பு தஞ்சை கமலா இந்திரா வழங்கும் ‘தில்லானா மோகனாம்பாள்’

1182
0
SHARE
Ad

கோலாலம்பூர் – காலமெல்லாம் கலையோடும் இசையோடும் இணைந்து பயணிக்கும் தமிழர்கள் இந்த மலையகத்திலும் கலை-இசை வெளிப்பாட்டிற்கு குறை வைக்கவில்லை. இதை இன்னும் ஊக்கும் விதமாக தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், மலேசிய இந்தியர்களின் கலை இசை பண்பாட்டு வளர்ச்சிக்காக தனி வாரியம் கண்டுள்ளது.

கூட்டுறவுக் காவலர் என்றும் இலக்கியக் காவலர் என்றும் பாராட்டப்படும் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் அவர்கள், கலைக்காவலர் என்றும் சொல்லத் தக்க வண்ணம் கலை வளர்ச்சிக்காக தனி வாரியம் கண்டு, தற்பொழுது எட்டாவது கலைப் படைப்பாக தில்லானா மோகனாம்பாள் என்னும் சமூக சித்திரம் நாட்டிய நாடக வடிவில் மலேசிய இந்திய கலை இரசிகர்களுக்காக பெட்டாலிங் ஜெயா சிவிக் அரங்கத்தில் ஜூன் மாதம் 22 மற்றும் 23 (சனி & ஞாயிறு) ஆகிய இரு தினங்களில் படைக்கப்படுகிறது.

நான்கு வயது முதல் 66 வயது வரை உடைய 70 கலைஞர்கள் படைக்கவிருக்கும் இந்த தில்லானா மோமனாம்பாள் நாட்டிய நாடகம், கலைப் பிரியர்களுக்கும் இசை ஆர்வலர்களுக்கும் நல்ல விருந்தாக அமையும் என்று இந்த படைப்பின் இயக்குநரும் தஞ்சை கமலா-இந்திரா நடனப் பள்ளியின் தோற்றுநருமான ‘நட்டுவத் திலகம்’ திருமதி இந்திரா மாணிக்கம் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

நவரச பாவங்களுடன் காதல், வீரம், நட்பு, நகைச்சுவைக் கூறுகளெல்லாம் வெளிப்படும் இந்த நாட்டிய நாடகம், தமிழ் கலை இரசிகர்களுக்கு முன்னமே அறிமுகமான கதையாகும்.

தமிழகத்தின் பிரபல வார இதழான ஆனந்த விகடனில் கொத்த மங்கலம் சுப்பு எழுதிய தொடரான தில்லானா மோகனாம்பாள் என்னும் படைப்பை திரைப்பட இயக்குநர் ஏ.பி.நாகராஜன் வெற்றித் திரைப்படமாகத் தயாரித்ததும் அதை இரசிகப் பெருமக்கள் கண்டு களித்ததும் நாம் அறிந்தது.

ஆங்கிலேய ஆட்சியின் மிச்ச சொச்சம், ஜமீன்தார் நடைமுறை, குறுக்கு மனம் படைத்தோரின் பொல்லாங்கான நடவடிக்கை ஆகிய தன்மை யெல்லாம் இழைந்தோடும் சமூகத்தில் நாதஸ்வரம் வாசிப்பதில் கைதேர்ந்த ஓர் அற்புதக் கலைஞனும் ஆடல் மகளிர் குலத்தில் தோன்றிய ஒரு நாட்டியத் தாரகையும் சம்பந்தப்பட்ட காதல் கதை இது என்பதுதான் கதையின் அடிப்படை.

நாதஸ்வர கலைஞன் தன்னுடைய கலை வெளிப்பாட்டில் வல்லவராக இருந்தாலும் தான் விரும்பும் மோகனாம்பாள் ஆடல் மகளிர் குலப் பெண் என்பதால் சந்தேகக் கண்ணுடன் அணுகுவது ஒருபுறம் இருக்க, “காதலாவது கத்திரிக்காயாவது; அதெல்லாம் நம் குலத்திற்கு தோதாக அமையாது; பெட்டி வண்டியில் கட்டுப் பணத்துடன் பட்டு உடையுடன் வரும் எவனாக இருந்தாலும் அவனது வலது கையைத் தாங்க உன்னுடைய வலதுபுறத் தோள் தயாராக இருக்க வேண்டும்” என்று கண்டிப்பு காட்டும் தன் தாயாரின் விபரீத புத்தியால் தடுமாறி நிற்கும் மோகனாம்பாளின் இக்கட்டான மன நிலை மறுபுறம் என கதை செல்கிறது.

தில்லானா மோகானாம்பாள் திரைப்படத்தில் பத்மினி ஏற்றிருந்த கதைப் பாத்திரத்தில் நம் மலையக நாட்டியச் செல்வியும் திருமதி இந்திராவின் புதல்வியுமான காமினி நடிக்கிறார்.

டான்ஸ்ரீ சோமா கலை அறவாரியத்திற்காக கண்ணகி, சிவ தாண்டவம், வள்ளித் திருமணத்தைத் தொடர்ந்து நான்காவது நாட்டிய நாடகமாக தில்லானா மோகனாம்பாள் படைக்கப்பட்டாலும் திருமதி இந்திரா படைக்கும் 23-ஆவது நாட்டிய நாடகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

2010-இல் தோற்றுவிக்கப்பட்ட டான்ஸ்ரீ கே.ஆர். சோமா கலை அறவாரியம் பீஷ்மர், இராஜேந்திர சோழன், சாணக்கிய சபதம், வாலி என்றெல்லாம் மலேசிய இரசிகர்களுக்காக ஏழு படைப்புகளை வழங்கியபின் எட்டாவது கலை வெளியீடாக ‘தில்லானா மோகனாம்பாள்’ அரங்கம் காண்கிறது.

பெரும் பொருட்செலவில் படைக்கக்கப்படும் இந்த நாட்டிய நாடகத்தை இலவசமாகக் கண்டு களிக்க தேசிய நில நிதி கூட்டுறவு சங்கமும் தஞ்சை கமலா-இந்திரா நடனப் பள்ளியும் இரசிகப் பெருமக்களை அன்புடன் அழைக்கின்றன.

தமிழ் நாட்டில் தியாகராஜன் என்பார் இயற்றி இசை அமைத்துள்ள பாடல்கள் நாடகத்தைக் காண வருவோரின் சிந்தைக்கு விருந்தாக அமையும் என்பது திண்ணம். காதல் வாழ்வில் ஊடலும் கூடலும் இணைந்தே இருக்கும் என்பதை கலை நயத்துடன் வெளிக்காட்டும் தில்லானா மோகனாம்பாள் நாட்டிய நாடகம் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளுடன் அரங்கேற்றப்பட உள்ளது.

ஓராண்டாகத் திட்ட மிட்டு, கடந்த ஆறு மாதங்களாக வடிவமைத்து, மூன்று மாதங்களாக கலைஞர்கள் அயராத பயிற்சி மேற்கொண்டு இந்த சனி-ஞாயிற்றுக் கிழமைகளில் படைக்கப்படும் தில்லானா மோகனாம்பாள் நாட்டிய நாடகத்தை கண்டும் கேட்டும் இரசிக்க வேண்டியது இனி இரசிகர்கள் பாடு.