(கடந்த ஜூன் 22, 23 இரு நாட்களுக்கு பெட்டாலிங் ஜெயா சிவிக் சென்டர் அரங்கத்தில், தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கம்-டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா கலை கலாச்சார அறவாரியத்தின் ஆதரவில் – தஞ்சை கமலா இந்திரா பரத நாட்டிய வித்யாலயாவின் தயாரிப்பில் – இலவசமாகப் படைக்கப்பட்ட தில்லானா மோகனாம்பாள் நாட்டிய நாடகம் எப்படி இருந்தது? தனது பார்வையில் விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)
பொதுவாக நாட்டிய நாடகம், என்ற வடிவத்தில் நான் அதிகமாகப் படைப்புகளைப் பார்த்ததில்லை. போரடிக்குமோ என்ற பயம்.
ஆனால், “தில்லானா மோகனாம்பாள்” என்ற பெயரில் மலேசியாவில் நாட்டிய நாடகம் படைக்கிறார்களா – சரி எப்படி கொத்தமங்கலம் சுப்புவின் மண்மணம் மணக்கும் நாவலை – சிக்கல் சண்முகசுந்தரத்தையும், மோகனாம்பாளையும் திரையில் உயிரும் உணர்ச்சியுமாக உலவ விட்ட சிவாஜி கணேசன்-பத்மினி இணையை – நாடக மேடையில் கொண்டு வருகிறார்கள்? எவ்வாறு நாட்டிய நாடகமாக உருமாற்றியிருக்கிறார்கள் என்பதைத்தான் போய்ப் பார்த்து விடுவோமே – அதிலும் இலவசம் தானே – என்று சென்ற எனக்கும் அரங்கம் முழுமையும் நிறைந்திருந்த கலாஇரசிகர்களுக்கும் அன்று கண்குளிரக் காணக் கிடைத்தது அற்புதக் கலைவிருந்து. மறக்க முடியாத அனுபவம்!
இவை பாராட்டுக்காகவோ, ஏதோ நமது மலேசியர்கள் செய்கிறார்களே அவர்களை ஊக்குவிப்போம் என்றோ உதிர்க்கப்படும் வார்த்தைகள் அல்ல.
அவ்வளவு அழகாக, மலேசியர்களும் நடனக் கலையில் உச்சம் தொட முடியும் என்பதை எடுத்துக் காட்டியிருக்கின்றனர் தஞ்சை கமலா இந்திரா பரத நாட்டிய வித்யாலயா குழுவினர். அவர்களின் முயற்சிக்கு பெரும் ஆதரவு கொடுத்து, அதற்காக பொருட் செலவும் செய்து மலேசிய இந்தியர்களுக்கு அற்புதக் கலைவிருந்து படைக்கப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறார்கள் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் டான்ஸ்ரீ சோமா கலை கலாச்சார அறவாரியம்.
காமினி மாணிக்கத்தின் மெய்மறக்கச் செய்யும் நடனங்கள்
இந்த நாட்டிய நாடகத்தை நாம் இரசித்துப் பார்க்கச் செய்யும் மற்றொரு அம்சம் நாயகியாக வரும் காமினி மாணிக்கத்தின் அழகும், நளினமான, இலாவகமான நடன அசைவுகளும்தான்! சில நடன அசைவுகளை அனாயசமாக, கொஞ்சமும் பிசிறில்லாம் ஆடி அசத்துகிறார் காமினி.
நாயகனாக வரும் பன்னீர் செல்வம் நடேசன் சற்றே முதிர்ந்த முகம் என்றாலும், அவரும் காமினிக்கு ஈடு கொடுத்து நடித்திருக்கிறார் – நாட்டியமாடியிருக்கிறார்.
மற்ற நடிகர்களின் வேடப் பொருத்தமும் அப்படியே நமக்கு தில்லானா மோகனாம்பாள் படத்தை நினைவூட்டுகிறது. குறிப்பாக வில்லன் நாகலிங்கம் (படத்தில் சகாதேவன்) மற்றும் தரகர் வைத்தியலிங்கம் (படத்தில் நாகேஷ்) ஆகிய இருவரின் வேடங்களும் நடன அசைவுகளும் கவர்கின்றன.
நாடகத்தின் இடையே வெறும் பரதம் மற்றும் பாரம்பரிய நடனங்கள் மட்டும் இடம் பெறச் செய்யாமல் மேற்கத்திய நடனங்களை கதைக்குப் பொருத்தமாக இணைத்திருப்பதும், கனவுக் காட்சி போன்று அமைக்கப்பட்டு அதில் நடனமணிகள் நவீன ஆடைகளுடன் ஆடுவதும் இந்த நாட்டிய நாடகத்தை நாம் போரடிக்காமல் நிமிர்ந்து பார்க்க வைக்கிறது.
ஓரிரு காட்சிகள் முடிந்ததும் அடுத்த காட்சிக்கு முன்பாக தமிழிலும், ஆங்கிலத்திலும் பின்னணிக் குரல் மூலம் கதையோட்டத்தை விளக்குவது பழைய தில்லானா மோகனாம்பாள் படத்தைத் தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள உதவுகிறது. ஆனால் தமிழில் மட்டும் சுருக்கமாகத் தந்து விட்டு, ஆங்கிலத்தில் விரிவாகவும், பல கூடுதல் தகவல்களுடன் தந்திருப்பது ஏனோ தெரியவில்லை. தமிழிலும் அவ்வாறே விரிவாகக் கூறியிருக்கலாம்.
நாடகத்தின் மற்றொரு சிறப்பு அனைவருக்கும் புரியும்படியான தமிழில் எளிமையான பாடல் வரிகளை வடித்திருப்பது. அதற்கேற்ப இசையும் துள்ளலாகவும், காட்சிகளுக்கு ஏற்ப பொருத்தமாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. எந்தக் காட்சியிலும் படத்தை நினைவுபடுத்தாத அளவுக்கு நாடகத்தின் இசைக்கோர்ப்பு சிறப்பான பாராட்டைப் பெறுகிறது.
அழகான, பிரம்மாண்ட அரங்க அமைப்பும், சில நிமிடங்களுக்குள் காட்சிகள் மாறுவதும், சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. குறிப்பாக இரயில் நிலையக் காட்சியில் கதா பாத்திரங்கள் இரயில் பெட்டிக்குள் நுழைந்து வெளியே வருவது போன்று தத்ரூபமான காட்சியமைப்பைப் பாராட்டலாம்.
மொத்தத்தில் தில்லானா மோகனாம்பாள் நாட்டிய நாடகம் குறிப்பாக நடனத்தில் மலேசியக் கலைஞர்களின் உச்சத்தைக் காட்டும் படைப்பாகும். நாடகம் இத்தனை சிறப்பாக வந்திருப்பதற்குப் பின்னணியில் நமது நாட்டின் முன்னணி நாட்டியமணியும், ஆசிரியையுமான இந்திரா மாணிக்கத்தின் கடும் உழைப்பும், திட்டமிடலும், வடிவமைப்புத் திறனும் முக்கியக் காரணங்களாகும்.
எல்லாம் சரி! தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்திற்கும், கே.ஆர்.சோமா கலை, கலாச்சார அறவாரியத்திற்கும் நமது வேண்டுகோள் இதுதான்!
இரண்டு நாட்களும் அரங்கம் நிறைந்த இரசிகர்கள் கண்டு களித்த இந்த நாட்டிய நாடகத்தை மீண்டும் ஒருமுறை அரங்கேற்றுங்கள். பார்க்கும் வாய்ப்பைத் தவறவிட்டவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குங்கள்.
அதுமட்டுமல்ல! தில்லானா மோகனாம்பாள் நாட்டிய நாடகத்தை நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் கொண்டு சென்று, கிள்ளான் பள்ளத்தாக்கின் இரசிகர்கள் அனுபவித்த கலை இன்பத்தை நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள இந்தியக் கலா இரசிகர்களும் கண்டு களிக்கும் வண்ணம் வாய்ப்பை வழங்குங்கள்.
தஞ்சை கமலா இந்திரா பரத நாட்டிய வித்யாலயாவின் உன்னத கலைப் பணி இனிதே தொடர வாழ்த்து கூறுவோம்.
இதுபோன்ற அற்புதக் கலைப்படைப்பை இரசிகர்கள் இலவசமாகவே கண்டு களிக்க பெரும் பொருட்செலவில் ஆதரவளித்த டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா கலை கலாச்சார அறவாரியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!