சென்னை – அட்லியின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ என்று மட்டுமே பெயரிடப்பட்டிருந்த படத்திற்கு ‘பிகில்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
‘பிகில்’ என்பற்கான அர்த்தம் ‘விசில்’ என்பதாகும். விசிலடிப்பதற்கு பிகில் அடிப்பது என சென்னை வட்டார மொழியில் கூறுவார்கள். விஜய் கால்பந்தாட்ட பயிற்றுநராக நடிக்கிறார் என்பதால் கதைக்கேற்ப இந்தப் பெயர் சூட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இன்று சனிக்கிழமை (ஜூன் 22) விஜய்யின் பிறந்த நாள் என்பதால் அதனை முன்னிட்டு படத்தின் பெயரும் முதல் தோற்றப் படங்களும், பதாகைகளும் வெளியிடப்பட்டன.
முதல் தோற்றப் படங்களின்படி விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. அப்பா-மகனாக நடிக்கிறாரா அல்லது சகோதரர்களாக நடிக்கிறாரா என்பது குறித்த தகவல்கள் இதுவரை இல்லை. மேலும் கோட்டும் சூட்டும் அணிந்த தோற்றத்திலும் விஜய் காட்சியளிக்கிறார்.
வயது முதிர்ந்த தோற்றத்தில் வரும் விஜய்யின் தோற்றம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆரஞ்சு நிற வேட்டி கறுப்பு சட்டையுடன் தோற்றம் தரும் விஜய் கழுத்தில் சிலுவையுடன் காணப்படுகிறார். அதே வேளையில் அவரது நெற்றியில் குங்குமமும் விபூதியும் பளிச்சிடுகிறது.
இதுவும் சமூக ஊடகங்களில் பரவி அவர் கிறிஸ்துவராக வருகிறாரா அல்லது இந்துவாக வருகிறாரா என்ற விவாதங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
விஜய் உட்கார்ந்திருக்கும் நிலையில் அவருக்கு அருகில் ஓர் அரிவாள் இறைச்சி வெட்டப்படும் மரக்கட்டையில் செருகப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவர் இறைச்சிக் கடைக்காரராக வருகிறார் என்ற ஆரூடங்களும் கிளம்பியுள்ளன.
இன்னொரு காட்சியில் கையில் அரிவாளுடன் காட்சி தருகிறார் விஜய். ஆக மொத்தத்தில் விஜய்யுடன் நயன்தாரா இணையும் ‘பிகில்’ படத்தின் முதல் தோற்றக் காட்சிகள் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருப்பதோடு, பல்வேறு விவாதங்களையும் விஜய் இரசிகர்களிடையே எழுப்பியுள்ளது.