லங்காவி – “பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி காணொளி விவகாரம் பொய் என்றும் தான் குற்றமற்றவன் என்றும் நம்புகிறார் என்றால் தாராளமாக என்மீது வழக்கு தொடுக்கட்டும். சந்திக்கத் தயார்” என காணொளியில் இருப்பது நான்தான் என ஒப்புக் கொண்டிருக்கும் ஹசிக் அப்துல்லா அப்துல் அசிஸ் சவால் விடுத்துள்ளார்.
லங்காவிக்கு ஓய்வுக்காக வந்திருக்கும் அவரது பிரத்தியேக நேர்காணலை ஸ்டார் இணைய ஊடகம் வெளியிட்டிருக்கிறது.
“முடிந்தால் என்மீது நேரடியாக அஸ்மின் காவல் துறையில் புகார் செய்யட்டும். அவரது அரசியல் செயலாளர் முகமட் ஹில்மான் இடாம் காவல் துறையில் புகார் செய்திருக்கும்போது அஸ்மின் எவ்வாறு காவல் துறையால் விசாரிக்கப்பட்டார்?” எனவும் ஹசிக் கேள்வி எழுப்பினார்.
எனது அரசியல் வாழ்க்கையை நிர்மூலமாக்கத் திட்டமிடப்பட்ட சதி இதுவென அஸ்மின் தொடர்ந்து கூறிவரும் நிலையில், ஹசிக்கோ, அந்தக் காணொளியில் இருந்தது நானும் அஸ்மினும்தான் என்ற நிலைப்பாட்டில் மாறாமல் இருக்கிறார்.
நேற்று சனிக்கிழமை (ஜூன் 23) ஸ்டார் இணைய ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலும் அந்தக் காணொளியில் இருந்தது நான்தான் என மறுஉறுதிப்படுத்தியிருக்கிறார். கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் இந்த காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு மலேசியர்களை அதிர்க்குள்ளாக்கின.
“நான் பொய் சொல்லவில்லை. அஸ்மின் என்மீது புகார் செய்யட்டும். வழக்கு போடட்டும். திறந்த நீதிமன்றத்தில் அனைத்து ஆதாரங்களையும் முன்வைப்போம். அப்போது பொய் சொல்வது யார் என்பதை மலேசியர்கள் தெரிந்து கொள்வார்கள்” என்றும் ஹசிக் வலியுறுத்தினார்.