இஸ்லாமாபாட்: கடந்த ஜூன் 16-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரையிலும் புளோரிடாவில் நடைபெற்ற எப்ஏடிஎப் சந்திப்புக் கூட்டத்தில், தீவிரவாதத்தையும் தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தான் அரசு உதவியாக செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டு காரணமாக அந்நாட்டிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் சீனா பாகிஸ்தானுக்கு சாதகமாக செயல்பட்டாலும், இந்த எச்சரிக்கைக்குப் பிறகு அந்நாடும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மலேசியா, சீனா மற்றும் துருக்கி நாடுகள் தற்போதைக்கு பாகிஸ்தானுக்கு சாதகமாக இருப்பதை உறுதி செய்து, தற்போதைய நடவடிக்கையிலிருந்து அந்நாட்டைக் காப்பாற்றினாலும், வருகிற அக்டோபரில் அறிவிக்கப்பட இருக்கும் கருப்பு பட்டியலிட்ட நாடுகளில் பாகிஸ்தான் இடம்பெறும் என நம்பப்படுகிறது.
பாகிஸ்தான் எப்ஏடிஎப்பின் உத்தரவை மதிக்காததால், கருப்பு பட்டியலில் அந்நாடு சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்தப் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் உலகளவில் பல கட்டுப்பாடுகளுக்கு பாகிஸ்தான் உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்பட்டு வரும் ஹபீஸ் சயீத், மசூத் அசார் மற்றும் பல ஐநா பட்டியலிட்டுள்ள தீவிரவாதிகள் மீது அந்நாடு சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்று பல உலக நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் எப்ஏடிஎப்பின் நடவடிக்கையால் பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் மோசமாகப் பாதிக்கப்படும் என நம்பப்படுகிறது.