சென்னை: சிந்துபாத் திரைப்படம் எதிர்ப்பார்த்தபடி கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்படவில்லை. ஹைதரபாத் உயர்நீதிமன்றம் இப்படத்தினை வெளியிட தடைவிதித்துள்ள காரணத்தால் இப்படம் மீண்டும் வெளியிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த படத்தினை கேப்டன் நிறுவனத்தின் சார்பில் ராஜராஜன் என்பவர் வெளியிட இருந்தார். இவர் ஏற்கனவே‘பாகுபலி‘ இரண்டாம் பாகத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டவர். அப்போது, பாகுபலி படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு 17 கோடி ரூபாய் பணத்தை கேப்டன் நிறுவனம் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது.
அர்கா மீடியா வோர்க்ஸ் நிறுவனம் இந்த தடையை நீதிமன்றத்திடம் கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் வேதுபதியுடன் அவரது மகனும் இம்முறை நடித்துள்ளார். இத்திரைப்படத்தினை இயக்குனர் சு. அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு இணையாக அஞ்சலி நடித்துள்ளார்.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது படமாக இப்படம் வருகிறது. அண்மையில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டு இரசிகர்கள் மத்தில் அமோக வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தடையினால், தனுஷ் நடிப்பில் வெளிவர இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் போன்ற நிலை சிந்துபாத் திரைப்படத்திற்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் படக்குழுவினரிடம் எழுந்துள்ளது.