Home வணிகம்/தொழில் நுட்பம் ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நிலக்கரி சுரங்கத்தைத் திறக்கிறார் இந்தியக் கோடீஸ்வரர் அடானி

ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நிலக்கரி சுரங்கத்தைத் திறக்கிறார் இந்தியக் கோடீஸ்வரர் அடானி

851
0
SHARE
Ad

 

பிரிஸ்பேன் – ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அந்நாட்டிலேயே மிகப் பெரிய நிலக்கரிச் சுரங்கத்தைத் திறப்பதற்கான அனைத்து அரசாங்க அனுமதிகளும் கடந்த வாரத்தில் கிடைத்திருப்பதைத் தொடர்ந்து உலகம் முழுக்க வணிக வட்டாரங்களின் ஒட்டு மொத்தப் பார்வையையும் தன்பக்கம் ஈர்த்திருக்கிறார் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான கௌதம் அடானி (படம்).

குஜராத் நாட்டைச் சேர்ந்த இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவராகப் பார்க்கப்பட்டவர். இந்தியாவின் மின்ஆற்றல் உற்பத்தி நிறுவனங்களை நடத்திவரும் இவருக்கு நிலக்கரியின் தேவை அதிகம் தேவைப்படுவதால், ஆஸ்திரேலியாவிலேயே மிகப் பெரிய நிலக்கரிச் சுரங்கத்தைத் திறக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் அடானி.

#TamilSchoolmychoice

கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவரது முயற்சிக்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடமிருந்து வலுவான எதிர்ப்புகள் எழுந்தன. பல முட்டுக் கட்டைகள் போடப்பட்டன. ஆனால், அவற்றையெல்லாம் கடந்து தற்போது உரிய அனுமதிகளைப் பெற்று அடானி திறக்கப் போகும் நிலக்கரிச் சுரங்கம் உலகிலேயே மிகப் பெரிய சுரங்கமாக இருக்கக் கூடும் என்றும் கணிக்கப்படுகிறது.

அடுத்த 60 ஆண்டுகளுக்கு கார்மிக்கல் (Carmichael) எனப் பெயர் குறிப்பிடப்படும் இந்த சுரங்கத்திலிருந்து 2.3 பில்லியன் டன் அளவு நிலக்கரி அகழ்ந்தெடுக்கப்படும்.

56 வயதான அடானி அதிகமாக பொது வெளிகளில் அறியப்படாதவர் என்பதால் அவர் குறித்த பல்வேறு தகவல்கள் ஆரூடங்களாக உலவி வருகின்றன.

மிகவும் சுவாரசியமாக பின்னணியைக் கொண்டவர் அடானி. தமிழகத்திலும் சில தொழில்களை அவர் தொடக்கியுள்ளார்.

இத்தனைக்கும் பள்ளிப் படிப்பை முடிக்க முடியாமல் பாதியிலேயே வெளியேறும் அளவுக்கு ஏழ்மையான சூழ்நிலையில் இருந்து போராடி வெற்றி பெற்றவர்.

ஒரு முறை இவர் இந்தியாவில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டு ஆஸ்திரேலிய டாலர் மதிப்பில் 3 மில்லியன் பிணைப் பணம் செலுத்தி விடுதலையானார். இவரைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 8 நபர்களும் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றிலிருந்தும் தப்பித்தவர் அடானி. கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி பயங்கரவாதிகள் மும்பை தாஜ் தங்கும் விடுதியில் தாக்குதல் நடத்தி 160 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தின் போது அதே தாஜ் தங்கும் விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்தவர் அடானி. ஆனால், அந்தக் கட்டிடத்தின் கீழ்த்தரை தளத்தில் (பேஸ்மெண்ட்) ஒளிந்து கொண்டதால் உயிர் தப்பினார். தனது கண்ணெதிரே 15 அடி தூரத்தில் மரணம் நிகழ்ந்ததைக் கண்டதாகப் பின்னர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

2021-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் கார்மிக்கல் நிலக்கரிச் சுரங்கம் செயல்படத் தொடங்கும்.

இதற்கிடையில் அடுத்த 2020 ஆண்டுக்குள் அடானியின் சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என வணிக ஊடகங்கள் கணித்துள்ளன.

தற்போதைக்கு இந்தியாவிலேயே மிக அதிகமான மின் ஆற்றலை உற்பத்தி செய்யும் நிறுவனத்தையும், இந்தியாவிலேயே மிக அதிக அளவில் சூரிய சக்தி ஆற்றலை உற்பத்தி செய்யும் நிறுவனத்தையும் உரிமையாகக் கொண்டிருப்பவர் அடானி என்பதும் குறிப்பிடத்தக்கது.