கலிபோர்னியா: ரிக்டர் அளவுகோலில் 7.1 அளவிலான நிலநடுக்கம் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரைத் தாக்கியுள்ளது. இந்த தாக்கத்தினால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸின் வடகிழக்கில் 202 கி.மீ தொலைவில் உள்ள டெத் வேலி தேசிய பூங்காவின் விளிம்பில் உள்ள ரிட்ஜெக்ரெஸ்ட் நகரத்தை நிலநடுக்கம் தாக்கி உள்ளது. இது ஐரோப்பிய– மத்திய தரைக்கடல் நில அதிர்வு நிறுவனத்தால் 7.1-ஆக அளவிடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் அங்குள்ள கட்டிடங்களுக்கு சில சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக சான் பெர்னார்டினோ கவுண்டி தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதிக்கு உள்ளாக்கி உள்ள நிலையில், மீண்டும் வெள்ளிக்கிழமை (அமெரிக்க நேரப்படி) அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், நேற்று ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் பல குடியிருப்புகளின் அடித்தளங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.