கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கோரிக்கைக்குப் பின்னர், கடந்த 2011-ஆம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஓய்வூதிய நிதியிலிருந்து (KWAP) எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்கு 2 பில்லியன் ரிங்கிட் கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ஓய்வூதிய நிதியின் முன்னாள் தலைவர் வான் அப்துல் அசிஸ் வான் கூறினார். முதலீட்டுக் குழு தீர்மானித்தபடி 1 பில்லியன் ரிங்கிட் வழங்கப்படவில்லை என்றும் அவர் விவரித்தார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடந்த சந்திப்பின் போது நஜிப் அவரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக அவர் தெரிவித்தார்.
அந்த சந்திப்பிற்கு முன்னதாக, அவரும், தலைமை நிருவாக அதிகாரியான அசியான் முகமட் நோ நஜிப்பை சந்தித்து எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்கு 1 பில்லியனை வழங்குவதற்காக முதலீட்டு குழு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தாகக் கூறினார்.
“அதன்பிறகு, நிதி அமைச்சின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கான பிரதமர் அலுவலகத்தில் ஒரு முறை நஜிப்பை சந்தித்தபோது, ஓய்வூதிய நிதியுடனான எஸ்ஆர்சி கடன் விண்ணப்பத்தின் ஒப்புதலை விரைவுபடுத்துமாறு நஜிப் என்னிடம் கேட்டிருந்தார்.
“2 பில்லியன் ரிங்கிட் கடன் போதுமானதாக இருக்கும். 1 பில்லியன் ரிங்கிட் அல்ல. ஆனால், இந்த சந்திப்பானது பிரதமர் அலுவலகத்தில் எனக்கும் அவருக்கும் மட்டும் நடந்தது. இந்த சந்திப்பின் உண்மையான தேதி எனக்கு நினைவில் இல்லை. மேலும், நஜிப் அளித்த அறிவுறுத்தல்கள் குறித்து எந்த குறிப்பும் நான் எடுத்துக்கொள்ளவில்லை” என்றுவான் குறிப்பிட்டார்.
நஜிப்பின் அந்த கோரிக்கை 2011-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் தேதியன்று ஒரு ஓய்வூதிய நிதியின் சிறப்புக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக அவான் தெரிவித்தார்.