கோலாலம்பூர்: சீன பெட்ரோலியம் பைப்லைன் எங்ஞினெரிங் லிமிடெட் (சிபிபி) நிறுவனத்தின் கணக்கிலிருந்து 1 பில்லியன் ரிங்கிட் நிதியை பறிமுதல் செய்ய மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
அந்நிறுவனம் ஒப்பந்தபடி பணிகளை முடிக்காமல் தற்போதைக்கு வெறும் 13 விழுக்காடு வேலைகளை மட்டுமே பூர்த்தி செய்துள்ள வேளையில், மொத்த செலவுப் பணிகளுக்கான ஊதியத்திலிருந்து 80 விழுக்காட்டினைபெற்று விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டம் இரத்து செய்யப்பட்ட பின்னரே அந்நிறுவனத்திடமிருந்து நிதியை திரும்பப் பெற அரசாங்கம் விரும்புகிறது என்றார்.
கடந்த சனிக்கிழமையன்று, சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள், மலேசியா சிபிபி கணக்குகளிலிருந்து 243.25 மில்லியன் அமெரிக்க டாலர்களை பறிமுதல் செய்ததாக செய்தி வெளியிட்டிருந்தது.
இதற்கிடையில், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் சீன அரசாங்கத்துடனான உறவில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்று பிரதமர் கூறினார்.
“செய்து முடிக்கப்பட்ட பணிகளுக்கான பணத்தை அரசாங்கம் திரும்பக் கோரவில்லை. மாறாக, செய்து முடிக்கப்படாத வேலைகளுக்காக மட்டுமே” என்று அவர் கூறினார்.