சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தனது மகள் ஹரித்ராவின் திருமணத்திற்காக வேலூர் மகளிர் சிறையில் இருந்து ஒரு மாத நிபந்தனை அடிப்படையில் (பரோல்) வெளியே வந்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக பேரறிவாளன், முருகன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் உள்பட ஏழு பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
அவர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. மேலும் பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றம் அந்த ஏழ பேரை விடுவிக்கும் உரிமையை மாநில அரசிடம் ஒப்படைத்தது. இதன் பின்னர் தமிழக அரசு ஆளுனருக்கு கடிதம் எழுதியது. ஆனால் தமிழக ஆளுனர் இன்னும் முடிவெடுக்காததால், அவர்களை விடுதலை செய்வதில் தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று வியாழக்கிழமை காலையில் வேலூர் மத்திய சிறையில் இருந்து நளினி வெளியே வந்தார். தனது 28 சிறைத் தண்டனையில் தந்தை மரணத்தின் போது 12 மணி நேர நிபந்தனையில் நளினி வெளிவந்திருந்தார். அதன் பின்னர், தற்போது ஒருமாத நிபந்தனையில் வெளிவந்துள்ளார்.