சென்னை: முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் வேலூர் மகளிர் சிறையில் நளினி தற்கொலைக்கு முயற்சித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு மற்றொரு குற்றவாளியை துன்புறுத்தியதாகக் கூறியப் பிறகு அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இது ஒரு மிரட்டல் சம்பவம் என்றும் அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை எனவும் தமிழக சிறைத்துறைத் தலைவர் சுனில் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, சிறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் நளினி தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்துள்ளார்.
சிறை அதிகாரிகள் நளினியை துன்புறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். நளினியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை உடனடியாக வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசிற்கு புகழேந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
1991-இல் ராஜீவ் காந்தி தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பேரணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அதற்காக நளினி மற்றும் அறுவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.