Home கலை உலகம் திரைவிமர்சனம்: “கடாரம் கொண்டான்” – தடை ஏன் என்பது படத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும்!

திரைவிமர்சனம்: “கடாரம் கொண்டான்” – தடை ஏன் என்பது படத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும்!

1410
0
SHARE
Ad

(மலேசியாவில் தடைசெய்யப்பட்ட ஒரு படத்திற்கு விமர்சனம் ஏன் என நீங்கள் கேட்பது புரிகிறது. ஏன் இந்தப் படம் தடை செய்யப்பட்டது, அதற்கானக் காரணங்கள் என்ன என்பதைப் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளும் நமது சென்னை நிருபர் “கடாரம் கொண்டான்” படத்தைப் பார்த்துவிட்டு வழங்கும் திரைவிமர்சனம் இது)

சென்னை –  ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கப்போகிறார் என்று இந்த படத்திற்கு அறிவிப்பு வந்தவுடனே ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு உருவானது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா இத்திரைப்படம் என்பதை பார்ப்போம்.

படம் துவங்கிய முதல் காட்சியிலேயே பரபரப்பு துவங்கிவிடுகிறது. கோலாலம்பூர் இரட்டை கோபுரத்திலிருந்து துப்பாக்கியால் சூடுபட்ட கே.கே (விக்ரம்) கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே விழ, அவரைக் கொல்ல ஒரு கும்பல் துரத்திக்கொண்டு வருகின்றனர். ஓர் இடத்தில் கே.கே சாலை விபத்தில் சிக்க அவர் மருத்துவமனையில் சேரக்கப்படுகிறார். அதே மருத்துவமனையில் இந்தியாவிலிருந்து புதிதாக மலேசியா வந்து மருத்துவராக வேலைக்கு சேர்ந்திருக்கும் வாசு, தனது நிறை மாதக் கர்ப்பிணி மனைவியான ஆதிராவுடன்(அக்சராஹாசன்) மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்த நேரத்தில் வாசுவின் மனைவியை ஒரு கும்பல் கடத்திக்கொண்டு போய், அவரிடம் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் கே.கே-வை அந்த மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டு வந்து தம்மிடம் ஒப்படைக்குமாறு மிரட்ட, துவங்குகிறது கதை. “பொயிண்ட் பிளாங்க்” (Point Blank) எனும் பிரெஞ்சு திரைப்படத்தின் கதையை முறையாக அனுமதி வாங்கி தமிழ் ரசிகர்களுக்கேற்ப தழுவ முயற்சி செய்திருக்கிறார்கள்.

கே.கே-வாக விக்ரம் மிகவும் மிடுக்குடன் காணப்படுகிறார். ஆனால் விக்ரம் ரசிகர்களுக்கு படம் முழுவதும் அவர் ஒரே முகபாவத்தோடு வருவதும், அவரது அழுத்தமில்லாத பாத்திரப்படைப்பும் சற்று ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

தன் மனைவியை தொலைத்துத் துயரப்படுவதிலும், கே.கேவை பல இடங்களில் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் திணறுவதிலும் வாசுவாக நடித்திருக்கும் அபி ஹாசன், சிறப்பான நடிப்பையே வழங்கியிருக்கிறார். இவர் நடிகர் நாசரின் மகன். இனி நடிக்கும் படங்களில் சரியான பாத்திரத் தேர்வின் மூலம் நிச்சயம் தந்தையைப் போல் ஒரு வலம் வர வாய்ப்பிருக்கிறது.

அபியின் மனைவியாக அக்சராஹாசன் நிறைவாகவே நடித்திருந்தாலும், அவர் இந்த கதாபாத்திரத்திற்கு சிறிதும் ஒட்டாமலேயே காணப்படுகிறார். இவர்களைத் தவிர மலேசிய போலீஸ் அதிகாரியாக வரும் மலையாள நடிகையான லீனா சற்று கவனிக்க வைக்கிறார்.

மற்ற அம்சங்கள்

இசை ஜிப்ரான். பாடல்களில் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் பின்னனி இசையில் படத்தை தூக்கி நிறுத்துகிறார். ஸ்ரீனிவாஸ் குத்தாவின் ஒளிப்பதிவும், பிரவின் கே.எல்., படத்தொகுப்பும் ஆங்கில திரைப்படங்களுக்கு நிகர். ஒலிப்பதிவு, கலை இயக்கம், ஆடை வடிவமைப்பு, சண்டைகாட்சிகள் என்று அனைத்து துறைகளிலும் நேர்த்தியாக அதன் வல்லுனர்களிடம் வேலை வாங்கி பாராட்டுகள் பெறும் இயக்குனர் ராஜேஷ் எம். செல்வா தாம் பொறுப்பேற்றிருக்கும் திரைக்கதையில் மட்டும் ஏனோ சரிந்திருக்கிறார்.

திரைக்கதையில் குளறுபடிகள்

விக்ரமின் பெயரான கே.கேவிற்கு என்ன அர்த்தம் என்பதில் துவங்கி, பல கேள்விகள் படம் முழுவதும் – அதில் வரும் வில்லன்களைப் போல நம்மை துரத்திக்கொண்டே இருக்கிறது. திரைக்கதையில் பரபரப்பாக ஏதாவது ஒன்று நடந்துக்கொண்டே இருக்கிறதே தவிர, பார்வையாளர்களுக்கு ஏன் எதற்கு என்று மட்டும் புரிய மறுக்கிறது. விக்ரமின் கே.கே கதாபாத்திரத்திற்கு ஒரு சிறிய பின் கதை கொடுக்கப்பட்டாலும், அது இந்த திரைப்படத்திற்கு எந்த அளவும் வலு சேர்க்கவில்லை. அதனாலேயே அவரின் கதாபாத்திரத்தோடு நம்மால் ஒன்ற முடியவில்லை.  தினசரி ஸ்டார் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் ’பிக் பாஸ்’ நிகழ்ச்சி அளவுக்கு கூட இரண்டாம் பாதி திரைக்கதையில் திருப்பங்கள் எதுவும் இல்லை என்பது சோகம்.

ஆக மொத்தத்தில் நடிகர் விக்ரம் ரசிகர்களுக்கு விருந்தாகவும் இல்லாமல், நிறைவான ஆக்ஷன் த்ரில்லர் படமாகவும் இல்லாமல் ”கடாரம் கொண்டான்” நம்மை ஏமாற்றவே செய்கிறது. ஆனால் இரண்டு மணி நேரம் வெறும் பரபரப்பான காட்சிகள் மட்டுமே போதும் என்று நினைப்பவர்கள் இந்த படத்தை தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.

மலேசியாவில் தடை செய்யப்பட்டது ஏன் தெரியுமா?

இத்திரைப்படம் முழுவதுமாக மலேசியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது என்றாலும், மலேசியாவில் இத்திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக மலேசியாவில் எடுக்கப்படும் இது போன்ற வெளிநாட்டு திரைப்படங்களுக்கான படப்பிடிப்புக்கான அனுமதியை மலேசிய அரசாங்கம் தருவதற்கு முன்பு அதன் திரைக்கதையை பார்த்து அது நம் நாட்டின் நற்பெயருக்கு எந்த வித கெடுதலையும் விளைவிக்காது என்று உறுதி செய்த பிறகே அனுமதி வழங்கப்படும். ஆனால் இத்திரைப்படத்தில் அரச மலேசிய போலீஸ் படையை (PDRM) மிகவும் மோசமாக சித்தரித்திருக்கின்றனர். இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு மலேசியாவில் படப்பிடிப்பு நடத்த எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது கேள்விக்குறியே!

பொதுவாக இந்திய திரைப்படங்களில் சாமான்ய மக்கள் போலீஸை அடிக்கும் காட்சிகளையே கத்தரித்துவிடும் மலேசிய நாட்டு தணிக்கை குழு. அப்படி இருக்கையில் இதில் மலேசிய போலீஸ் படையில் இருக்கும் சிலரை மாஃபியா கும்பல் அளவுக்கு சித்தரித்திருக்கின்றனர். அதுக்கும் மேலாக, ஒரு மலேசிய பெண் காவல் அதிகாரி நிறை மாத கர்ப்பிணியான அக்சராவை கொடூரமாக அடித்துக் கொல்ல முயற்சி செய்யும் காட்சியும் இதில் இடம்பெற்றுள்ளது.

ஆகையால் இத்திரைப்பத்தை தடை செய்ய முடிவெடுத்திருப்பதில் எந்த ஒரு தயக்கமும் மலேசிய தணிக்கை குழுவுக்கு இருந்திருக்காது. தமிழ் படங்களின் வெளிநாட்டு வியாபாரத்தில் ஒரு கனிசமான பங்கு மலேசியாவிலிருந்து வருவதனால், இது கண்டிப்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு பெரிய இழப்பையே தந்திருக்கும். இனி வரும் காலங்களில் மலேசியாவில் மையமாக கதையைக் கொண்டு திரைப்படம் எடுக்க நினைக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இயக்குனர்கள் இது போன்ற விஷயங்களில் மேலும் கவனமாக இருப்பது நல்லது.

– செல்லியல் சென்னை நிருபர்