Home வணிகம்/தொழில் நுட்பம் கேபே காப்பி டே உரிமையாளர் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டாரா?

கேபே காப்பி டே உரிமையாளர் சித்தார்த்தா தற்கொலை செய்து கொண்டாரா?

1084
0
SHARE
Ad

பெங்களூரு – இந்தியா முழுவதும் கேபே காப்பி டே (Cafe Coffee Day) என்ற நூற்றுக்கணக்கான தொடர் உணவகங்களை நடத்தி வரும் நிறுவனத்தின் உரிமையாளரான விஜி. சித்தார்த்தா காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தரும் செய்தி பரவி வருகின்றது.

நேற்று திங்கட்கிழமை மாலை அந்த ஆற்றின் ஓரம் தனது காரிலிருந்து அவர் இறங்கியதாகக் கூறப்படும் வேளையில், நபர் ஒருவர் ஆற்றில் குதித்ததைப் பார்த்ததாக அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர்.

சித்தார்த்தா கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும் ஆவார். எஸ்.எம்.கிருஷ்ணா நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியின் வழி அரசியலில் ஈடுபட்டு, மத்திய வெளியுறவு அமைச்சராகவும், மகராஷ்டிரா மாநில ஆளுநராகவும், கர்நாடக மாநில முதல்வராகவும் பதவிகளை வகித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அண்மையில் கிருஷ்ணா காங்கிரசிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைந்தார்.

காப்பித் தோட்டம், தங்கும் விடுதிகள், கபே காபி டே தொடர் உணவகங்கள் என பலதரப்பட்ட வணிகங்களில் ஈடுபட்டு வந்த சித்தார்த்தா கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற ஆரூடங்கள் இந்திய வணிக வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

தனது கபே காப்பி டே நிறுவனத்தின் இயக்குநர் வாரியத்திற்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் தான் “இதற்கு மேலும் தொடர முடியாமல் வாழ்க்கையைக் கைவிடுகிறேன்” – என்ற தோரணையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் நேத்ராவதி ஆற்றின் ஓரமாக காரை நிறுத்துமாறு தனது கார் ஓட்டுநருக்குக் கட்டளையிட்ட சித்தார்த்தா காரை விட்டு இறங்கி வெளியே சென்று சிறிது நேரமாகியும் திரும்பாத காரணத்தால் பதட்டமடைந்த அவரது கார் ஓட்டுநர் சித்தார்த்தாவின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

நிறுவனப் பங்குகளை விற்றதில் பெற்ற கோடிக்கணக்கான ரூபாய் பணத்திற்கு உரிய வருமானவரியை அவர் செலுத்தாத காரணத்தால், அவரது காப்பி டே நிறுவனப் பங்குகளை வருமான வரி இலாகா முடக்கி வைத்திருப்பதாக அறியப்படுகிறது.

சித்தார்த்தா விழுந்ததாக நம்பப்படும் நேத்ராவதி ஆற்றில் படகுகளும் முக்குளிப்பாளர்களும் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.