பெங்களூரு: கேபே காப்பி டே உரிமையாளர் வி.ஜி. சித்தார்த்தாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் கடைசியாகக் காணப்பட்ட பாலத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் இருந்து மீனவர்களால் அவரது உடல் மீட்கப்பட்டதாக தட்சிணா கன்னட துணை ஆணையர் சசிகாந்த் செந்தில் கூறினார்.
நேத்ராவதி ஆற்றின் பாலத்தில் இருந்து சித்தார்த்தா கடந்த திங்கள்கிழமை மாலை காணாமல் போனார். உள்ளூர் மீனவர் ஒருவர் கூறுகையில் திங்கள்கிழமை மாலை யாரோ ஆற்றில் குதிப்பதைப் பார்த்தாகக் கூறியுள்ளார்.
புதன்கிழமை காலை 6:50 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கேபே காப்பி டே (Cafe Coffee Day) என்ற நூற்றுக்கணக்கான தொடர் உணவகங்களை நடத்தி வரும் நிறுவனத்தின் உரிமையாளரான வி.ஜி. சித்தார்த்தா காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தரும் செய்தி பரவியது.
காப்பித் தோட்டம், தங்கும் விடுதிகள், கபே காபி டே தொடர் உணவகங்கள் என பலதரப்பட்ட வணிகங்களில் ஈடுபட்டு வந்த சித்தார்த்தா கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற ஆரூடங்கள் இந்திய வணிக வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.