கோலாலம்பூர், அக்டோபர் 14 – உலகம் எங்கும் காப்பி தொடர் உணவகங்கள் தற்போது மிகவும் பிரபலமாகிவிட்டன. அந்த வகையில், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா போன்ற பல நாடுகளில் வெற்றிகரமாக இயங்கி வரும், அனைத்துலக அளவில் புகழ் பெற்ற காப்பி தொடர் உணவகமான ‘கேஃபே காப்பி டே’ (Café Coffee day) கோலாலம்பூரில் தனது முதல் கிளையை திறந்துள்ளது.
பெர்ல் இண்டர்நேஷனல் தங்கும் விடுதியில் அமைந்துள்ள கேஃபே காப்பி டே உணவகத்தின் முகப்புத் தோற்றம்…
தலைநகர், பழைய கிள்ளான் சாலையில் (ஜாலான் கிளாங் லாமா) உள்ள பெர்ல் இண்டர்நேஷனல் ஹோட்டல் என்ற பிரபல தங்கும் விடுதியின் கீழ்த் தளத்தில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் கேஃபே காப்பி டே கடந்த அக்டோபர் 10ஆம் தேதி திறக்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக இயங்கி வருகின்றது.
காப்பி கலாச்சாரம், இன்றைய இளைய சமுதாயத்தின் விருப்பப் பொழுது போக்காக இருக்கின்றது.
கேஃபே காப்பி டே உணவகத்தின் உட்புறத் தோற்றம்….
விதம் விதமான காப்பி வகைகள் ருசித்துக் கொண்டே, பசித்தால் துணைக்கு ரொட்டி, கேக் வகைகள் கொஞ்சம் சுவைத்துக் கொண்டு, தனியாக அமர்ந்து கணினியில் ஈடுபட்டுக்கொண்டோ, நண்பர்களுடன் அளவளாவிக்கொண்டோ அமர்ந்திருக்கும் கலாச்சாரம் இன்றைக்கு உலகெங்கிலும், இளைஞர்களிடையே பழக்கமாகி விட்டிருக்கின்றது.
இதனைக் கருத்தில் கொண்டுதான், கேஃபே காப்பி டே தொடர் உணவகத்தை மலேசியாவுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சிகளில் தான் இறங்கியதாக, இந்த உணவகத்தை மலேசியாவில் அறிமுகப்படுத்தும் நிறுவனமான ஓஎன்எஸ் வெஞ்சர்ஸ் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஹாஜி சாகுல் ஹமீட் (படம்) செல்லியல் நடத்திய பிரத்தியேக சந்திப்பின்போது தெரிவித்தார்.
உலகின் பல நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பாவின் பல நகரங்களிலும் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த உணவகம், இந்தியாவில் 1600க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு, அந்த நாட்டிலேயே மிகப் பெரிய தொடர் காப்பி உணவகமாக உருவெடுத்துள்ளது.
பெர்ல் இண்டர்நேஷனல் தங்கும் விடுதிக்கு அடுத்ததாக, பிரிக்பீல்ட்சில் உள்ள நியூ சென்ட்ரல் பேரங்காடியிலும், கோலாலம்பூர் சென்ட்ரல் இரயில் போக்குவரத்து மையத்திலும், ஷா ஆலாமிலும் தங்களின் அடுத்த கிளைகள் அமையவிருக்கின்றன என்றும், இதற்கான அடிப்படை பணிகள் நடந்து வருவதாகவும் சாகுல் ஹமீட் மேலும் கூறினார்.
“அடுத்த மூன்றாண்டுகளில் குறைந்த பட்சம் 30 தொடர் உணவகங்களை நாட்டின் பல பாகங்களிலும் நிறுவுவதுதான் எங்களின் வணிகத் திட்டம்” என்றும் சாகுல் ஹமீட் தெரிவித்தார்.
கேஃபே காப்பி டே, வணிக முத்திரை உரிமம் (franchise) முறையில் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே, மலேசியாவைத்தான் முதல் தளமாக, தாங்கள் இயங்குவதற்கு இந்த நிறுவனத்தின் தலைமையகம் தேர்ந்தெடுத்துள்ளது, மலேசியாவின் வணிக சுதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் சாகுல் ஹமீட் கூறினார்.
காப்பி உணவக கலாச்சாரத்தை விரும்பும் பயனர்களிடையே வித்தியாசமான சுவை கொண்ட காப்பி பானங்கள், பலதரப்பட்ட உள்நாட்டு உணவுகளின் இணைப்பு, ரம்மியமான சூழ்நிலை, நியாயமான விலை, சுத்தமான, துரிதமான உணவு விநியோக சேவைகள் ஆகியவை மூலமாக, தங்களின் வணிக முத்திரையை இந்த நாட்டில் பிரபலப்படுத்தவும், தங்களின் உணவகங்களை வணிக ரீதியாக வெற்றிகரமாக இயக்கவும் தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் சாகுல் ஹமீட் குறிப்பிட்டார்.