Home அவசியம் படிக்க வேண்டியவை பிரிம் உதவித்தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படும் – அகமட் மஸ்லான்

பிரிம் உதவித்தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படும் – அகமட் மஸ்லான்

620
0
SHARE
Ad

brimகோலாலம்பூர், அக்டோபர் 14 – பிரிம் உதவித்தொகையை ஆடம்பர செலவுகளுக்கு மக்கள் பயன்படுத்திவிடக்கூடாது என்பதற்கு அத்தொகை மூன்று தவணைகளில் வழங்கப்படும் என்று துணை நிதியமைச்சர் டத்தோ அகமட் மஸ்லான் விளக்கமளித்துள்ளார்.

மக்களின் குறைந்த வருமானத்தைப் பொறுத்து, தகுதிக்கேற்ற வகையில் இரண்டு பிரிவுகளாக வழங்கப்படும் பிரிம் உதவித்தொகை 300 ரிங்கிட்டில் இருந்து 750 ரிங்கிட் மற்றும் 950 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

என்றாலும் இந்த தொகையை மொத்தமாகக் கொடுத்தால் ஐபோன் 6 போன்ற ஆடம்பர பொருட்களை மக்கள் வாங்கிவிடுவார்கள் என்பதால்,  ஜனவரி, மே மற்றும் செப்டம்பர் என மூன்று மாதங்களில் மூன்று தவணைகளாக வழங்கப்படும் என்று அகமட் மஸ்லான் இன்று நடைபெற்ற அரசாங்க பணியாளர்களுக்கான 2015 வரவு செலவு விளக்கமளிப்பில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஒவ்வொரு தவணையில் வழங்கப்படும் தொகையும், மூன்று மாதங்களுக்குத் தேவையான சராசரி வீட்டு உபயோகப்பொருட்களை வாங்கும் செலவுகளை சரிகட்ட போதுமானதாக இருக்கும் என்றும் மஸ்லான் குறிப்பிட்டார்.

மாதம் 3000 ரிங்கிட்டிற்குக் குறைவாக வருமானம் பெறும் குடும்பத்திற்கு 950 ரிங்கிட்டும், 3000 ரிங்கிட்டிலிருந்து 4000 ரிங்கிட் வரை மாத வருமானம் பெறும் குடும்பத்திற்கு 750 ரிங்கிட்டும் பிரிம் உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும், தனித்து வாழும் 21 வயதிற்கு மேற்பட்டவர்கள் மாதம் 2000 ரிங்கிட்டிற்குக் குறைவாக வருமானம் பெற்றால் அவர்களுக்கு 350 ரிங்கிட் உதவித்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.