கோலாலம்பூர், நவம்பர் 10 – மலேசியாவின் முதல் கிளை திறக்கப்பட்டு ஏற்கனவே வெற்றிகரமாக இயங்கிவரும் உலகப் புகழ் பெற்ற தொடர் காப்பி உணவகமான கேஃபே காப்பி டே (Café Coffee day) தனது இரண்டாவது கிளையை தலைநகர் நியூ சென்ட்ரல் பேரங்காடியில் திறந்துள்ளது.
பிரிக்பீல்ட்சில் அமைந்துள்ள, கோலாலம்பூரின் போக்குவரத்து மையமான கே.எல்.சென்ட்ரல் வளாகத்தை ஒட்டி அண்மையில் பிரம்மாண்டமாக எழுந்திருக்கும் பேரங்காடி நியூ சென்ட்ரல், தற்போது அனைவரையும் ஈர்க்கும் வர்த்தக மையமாகத் திகழ்ந்து வருகின்றது.
நியூ சென்ட்ரலில் அமைந்துள்ள கேஃபே காப்பி டே உணவகத்தின் உட்புறத் தோற்றம்…
இங்குதான் தனது இரண்டாவது கிளையை காப்பி டே கடந்த நவம்பர் 5ஆம் தேதி திறந்து தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றது.
கடந்த மாதம் கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலையில் உள்ள பெர்ல் இண்டர்நேஷனல் தங்கும் விடுதியின் கீழ்த்தள வளாகத்தில் தனது முதல் கிளையை காப்பி டே திறந்தது.
ஐரோப்பா, இந்தியா, மத்திய கிழக்கு உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இயங்கிவரும் காப்பி டே, இந்தியாவில் மட்டும் சுமார் 1600க்கும் மேற்பட்ட கிளை உணவகங்களைக் கொண்டு அந்த நாட்டிலேயே மிகப் பெரிய தொடர் காப்பி உணவகமாக புகழ் பெற்றுள்ளது.
தனது உலக வர்த்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, தென் கிழக்காசியாவிலேயே முதல் நாடாக மலேசியாவை காப்பி டே தேர்ந்தெடுத்துள்ளது.
இதன் மலேசிய வணிக உரிமத்தை ஓ.என்.எஸ் வெஞ்சர்ஸ் சென்டிரியான் பெர்ஹாட் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஹாஜி ஷாகுல் ஹமீட் (படம்) தங்களின் காப்பி டே உணவகத்தின் இரண்டாவது கிளை தலைநகரின் ஆகப் புதிய, பிரம்மாண்டமான பேரங்காடியில் இடம் பெற்றிருப்பது குறித்து பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டார்.
“நாங்கள் ஏற்கனவே, வகுத்திருந்த வர்த்தகத் திட்டங்களின்படி காப்பி டேயின் இரண்டாவது கிளையைத் திறந்திருக்கின்றோம். அடுத்த சில மாதங்களில் மேலும் மூன்று உணவகங்களை கிள்ளான் பள்ளத்தாக்கில் திறப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம். அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில் மலேசியாவில் 30 காப்பி டே உணவகங்களைத் திறப்பதுதான் எங்களின் இலக்கு” என ஷாகுல் ஹமீட் கூறினார்.
நியூ சென்ட்ரல் பேரங்காடியில் திறக்கப்பட்ட கேஃபே காப்பி டே உணவகத்தில், முதல் நாள் திறப்பு விழாவின் போது, காப்பி அருந்தி மகிழும் வாடிக்கையாளர்களில் சிலர்….