மெல்பெர்ன், நவம்பர் 10 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஆஸ்திரேலிய மக்களும், தாமும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் டோனி அபாட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், ஜி20 உச்ச நிலை மாநாட்டில் இந்தியாவின் ஆதரவை ஆஸ்திரேலியா பெரிதும் எதிர்பார்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 14ஆம் தேதி ஜி20 உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியா செல்கிறார் பிரதமர் மோடி. மேலும் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக்குழு கூட்டத்திலும் அவர் உரையாற்ற உள்ளார். இத்தகைய கூட்டம் ஒன்றில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
“அனைத்துலக பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பினை உருவாக்குதல் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்த தனது சொந்த அனுபவங்களை, பிரதமர் நரேந்திர மோடியுடன் பகிர்ந்து கொள்ள உள்ளார் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட். ஆஸ்திரேலியாவின் கட்டமைப்பு பணிகளுக்காக ஜி20 உச்சி மாநாட்டில் மோடியின் ஆதரவை டோனி அபாட் நாடியுள்ளார். இதற்கு பிரதமர் மோடியும் தனது ஆதரவை தெரிவிப்பார் என நம்புகிறோம்,” என ஆஸ்திரேலிய பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.