கோலாலம்பூர், நவம்பர் 10 – பூப்பந்து வீரர் டத்தோ லீ சொங் வெய்யின் உடலில் தடைசெய்யப்பட்ட ‘டெக்சாமெதாசோன்’ என்ற ஊக்க மருந்தை செலுத்தியது தேசிய விளையாட்டு மையத்தின் மருத்துவர்கள் அல்ல என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் உள்ள விளையாட்டாளர்களுக்கான தனியார் நிபுணத்துவ மருத்துவ மையம் (கிளினிக்) ஒன்றிலேயே காயங்களுக்கான மரபணு சிகிச்சை ஒன்றின்போது அவருக்கு அம்மருந்து செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“பொதுவாக ‘டெக்சாமெதாசோன்’ மருந்தை காயங்களுக்காக அளிக்கப்படும் சிகிச்சைகளில் பயன்படுத்த அனுமதியுண்டு. இம்மருந்து 10 நாட்கள் மட்டுமே உடலில் நீடித்திருக்கும். ஆனால் சொங் வெய்யின் உடலில் அதற்கும் மேற்பட்ட காலம் அம்மருந்து நிலைத்திருக்க என்ன காரணம் என உறுதியாகத் தெரியவில்லை,” என செய்தியாளர்களிடம் கைரி தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.
எனினும் அக்குறிப்பிட்ட அத்தனியார் மருத்துவமனையை சொங் வெய்க்கு பரிந்துரை செய்தது தேசிய விளையாட்டு மையம்தான் என்றார் அவர்.
அனைத்துலக பூந்துபந்து சம்மேளனத்தின் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கைரி தெரிவித்தார்.