கோலாலம்பூர், நவம்பர் 10 – ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கு முன்பே தமிழ்க் கணினி பயன்பாட்டிற்காக மலேசியாவில் உருவாக்கம் கண்டதுதான் ‘முரசு’ அஞ்சல் செயலி. தமிழ்க் கணினி உலகில் நீண்ட காலமாக ஈடுபாடு காட்டி வரும் முத்து நெடுமாறனின் வடிவமைப்பிலும், முயற்சியிலும் உருவான முரசு இன்னும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த முரசு அஞ்சலைத் தானும் பயன்படுத்தி வருவதாகவும், முரசு சிறப்பாக செயல்படுகின்றது என்றும் தமிழகத்தின் எழுத்தாளர் ஜெயமோகன் (படம்) தனது இணையப் பதிவில் பாராட்டு தெரிவித்தார். இதனை உருவாக்கிய முத்து நெடுமாறனுக்கும் ஜெயமோகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
முத்து நெடுமாறன் செல்லினம் மற்றும் செல்லியல் இணைய – செல்பேசித் தளங்களின் தொழில் நுட்ப வடிவமைப்பாளரும் ஆவார்.
இன்றைய நவீன தமிழ் இலக்கிய உலகின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவரான ஜெயமோகன், தமிழ்க் கணினி பயன்பாட்டில் ஈடுபாடு காட்டுபவர் என்பதோடு, இணையத் தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார்.
பல தமிழ்த் திரைப்படங்களுக்கும் கதை, திரைக்கதை, வசனம் துறைகளில் பணியாற்றி வருபவர் ஜெயமோகன். நான் கடவுள், அங்காடி தெரு போன்ற படங்களில் பணியாற்றி வரும் ஜெயமோகன் தற்போது கமல்ஹாசனின் பாபநாசம் படத்தில் திரைக்கதை, வசனம் உருவாக்கத்தில் பணியாற்றி வருகின்றார். நாகர்கோவில் வட்டார மொழியில் எழுதுவதில் திறன்பெற்ற ஜெயமோகன், அந்த வட்டார மொழியில் உருவாகி வருவதால் பாபநாசம் படத்திற்கும் வசனம் எழுதுகின்றார்.
இவரது எழுத்து கைவண்ணத்தில் உருவாகியுள்ள இயக்குநர் வசந்தபாலனின் ‘காவியத் தலைவன்’ திரைப்படம் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றது.
முரசு அஞ்சல் செயலிக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் ஜெயமோகனின் இணையப் பதிவின் ஒரு பகுதி பின்வருமாறு:-
“…சிலவருடங்கள் கழித்து 2000 த்தில் அமெரிக்க வாசகர் ஒருவரின் உதவியால் நான் ஒரு கணிப்பொறி வாங்கினேன். அப்போது அது என் பணவசதிக்கு அப்பாற்பட்ட ஆடம்பரம். நண்பர் நீலகண்டன் அரவிந்தன் வந்து என்னை தமிழ் தட்டச்சுக்குப் படிப்பித்தார். அவர்தான் முரசு அஞ்சல் என்ற சேவையை எனக்கு அறிமுகம் செய்தார். அன்று முதல் இன்றுவரை நான் எழுதுவது முரசு அஞ்சல் எழுத்துருவில்தான்.
நான் பேசும் வேகத்தில் தட்டச்சு செய்பவன். ஒருமணிநேரத்தில் இரண்டாயிரம் சொற்கள் வரை. அது தட்டச்சில் ஒரு சாதனை என்கிறார்கள். கணிப்பொறியில் தட்டச்சிட ஆரம்பித்தபின்னர் என் எழுதும் முறை மாறிவிட்டது. முதல் விஷயம் எழுதும் அளவை மனம் கணக்கிட்டபடியே இருக்கிறது. சொற்கணக்கு வரிக்கணக்கு. பத்தி அளவுகள் சீராக அமைகின்றன. ஒரு பத்தி என்பது ஒரு கருத்து என்பதனால் கட்டுரைகளின் அமைப்பு சமவிகிதம் கொண்டதாக ஆகியது
மேலும் எழுதுவதை மாற்றுவது செம்பிரதி எடுப்பது ஆகியவற்றில் அதிக நேரம் வீணாவது தடுக்கப்பட்டது.நான் எழுதும் பக்கங்கள் சீராக இருக்கவேண்டும் என விரும்புகிறவன். பிழைகளை நான் வெட்டுவதில்லை. முன்பெல்லாம் நான் எழுதும் காகிதப் பக்கங்களில் பிழைகள் மேல் காகிதத்தைவெட்டி ஒட்டுவேன். கணிப்பொறி சீரான எழுத்துப் பக்கங்களை அளித்து என் படைப்பூக்கத்தை தக்கவைக்க உதவுகிறது.
இப்போது பலவகையான எழுத்துருக்கள் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். பலவற்றை நானே சோதித்துப் பார்த்துவிட்டேன். முரசு தான் எனக்கு வசதியாக இருக்கிறது. அத்துடன் முரசு எழுத்துருவை பிற இதழ்கள் பதிப்பகங்களின் எழுத்துருக்களுக்கு எளிதில் மாற்றிக்கொள்ளலாம். முரசு எழுத்துருவை உருவாக்கிய முத்து நெடுமாறன் குழுவினருக்கு நான் கடமைப்பட்டவன்.”
மேற்கூறப்பட்ட கட்டுரையின் முழுமையான வடிவத்தை ஜெயமோகனின் கீழ்க்காணும் இணையப் பதிவில் காணலாம்:
http://www.jeyamohan.in/?p=5362