கொழும்பு: கிட்டத்தட்ட 50 நாடுகளின் குடிமக்களுக்கு இலவச சுற்றுலா விசாக்களை வழங்க உள்ளதாக இலங்கை அரசாங்க ஆவணமொன்று குறிப்பிட்டுள்ளதாக தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கான இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் சுற்றுலா மேம்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 21-ஆம் தேதி இஸ்லாமிய போராளிகள் இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் சொகுசு தங்கும் விடுதிகளில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தியதில் 42 வெளிநாட்டினர் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அதற்கு பின்னர், பல நாடுகள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என தம் மக்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தன. கடந்த மே மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை 70.8 விழுக்காடு சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சுற்றுலா விசாக்களை அகற்ற அமைச்சரவை ஒப்புக் கொண்டதாகவும், பொதுவாக 20 அமெரிக்க டாலர் முதல் 40 அமெரிக்க டாலர் வரையிலும் கட்டணம் விதிக்கப்படுவது இனி கிடையாது என்று இலங்கை தெரிவித்துள்ளது.
“இந்த சலுகை ஆறு மாதங்களுக்கு நீடிக்கும். ஆறு மாதங்களுக்குப் பிறகு விசாக்களின் வருவாய் இழப்பை அரசாங்கம் மதிப்பிடும்” என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரி ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா மேம்பாட்டு அமைச்சர் ஜான் அமரதுங்க ராய்ட்டர்ஸுக்கு இது குறித்து உறுதிபடுத்தியதாகக் கூறப்படுகிறது. தாய்லாந்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூசிலாந்து, மலேசியா, சுவிட்சர்லாந்து, கம்போடியா, டென்மார்க், சுவீடன், நோர்வே, பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 48 நாடுகள் இதில் அடங்கும்.