Home One Line P1 இந்திய அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம் – இந்திய ஹஜ் தலைவர் அபுபக்கார்...

இந்திய அரசுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம் – இந்திய ஹஜ் தலைவர் அபுபக்கார் வேண்டுகோள்

883
0
SHARE
Ad

சென்னை – இந்திய அரசுக்கு எதிராக வலைத் தளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் குறுஞ்செய்திகளைப் பதிவிட வேண்டாம் என மலேசிய தொப்புள்கொடி உறவுகளுக்கு இந்திய ஹஜ் சங்கத் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கார் (படம்)  அறிக்கை ஒன்றின் வழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“இந்திய சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் பிஜேபி அரசாங்கத்தால் பழிவாங்கப்படுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு, இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளை தவறாக சித்தரித்து வாட்ஸ்அப் மூலமும் முகநூல்கள் மூலமும் அரசுகளுக்கு எதிராக அனுப்பப்படும் செய்திகளால், இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட தங்களின் தொப்புள்கொடி உறவுகளாகிய எங்களுக்கும் பாதகமே விளைவிக்கும் என்பதால், அரசாங்கத்தை குறை கூறி எந்த செய்திகளையும் பதிவிட வேண்டாம்” என்றும் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்தார்.

இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவருமான பிரசிடெண்ட் அபுபக்கார் குறிப்பாக மலேசியத் தமிழர்களுக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

2019 ஆம் ஆண்டின் ஹஜ் பயணத்திற்கு 2 லட்சம் பேருக்கு ஹஜ் விசா வாங்கித் தந்த இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அபுபக்கார் தெரிவித்தார்.

இந்திய சிறுபான்மை முழு அமைச்சர் ஹ்தார் அப்பாஸ் அவர்களும் துணை அமைச்சர் வீரேந்திரகுமார் அவர்களும் மிகச் சிறப்பாக சிறுபான்மை மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள்.

2019-2020-இல் சிறுபான்மை மக்களுக்கு சுமார் 2400 கோடி ரூபாய் கடன் வழங்கும் தொகையாக ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள், ஜெயின் சமூகத்தவர்கள் தலித் இனத்தவர்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் சிறு தொழில் செய்யவும் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்கவும் 6 சதவிகித வட்டிக்கு கடன் கொடுக்கப்படுகிறது. (வங்கிகளில் 12 சதவிகிதம் முதல் 19 சகவிகிதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது).

கடன் பெறுவதும் மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. மின்அஞ்சல் மூலம் இந்திய சிறுபான்மை அமைச்சகத்திற்கு தெரிவிப்பதன் மூலம், கடனை நேரடியாக மத்திய அரசே கூட்டுறவு வங்கியின் மூலம் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்திவிடும். சிறுபான்மையினர் வெளிநாடுகளில் கல்வி பயிலுவதற்கும் கடன் வழங்கப்படுகிறுது. 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாய் வரை சிறுபான்மையினர் தொழில் செய்வதற்கு கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சென்னையில் மட்டும் 134 கோடி ரூபாயை சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கும் தொழில் தொடங்குவோர்களுக்கும் ஒரே வாரத்தில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறு இருக்க,

“தமிழகத்தில் வாழும் எங்களுக்கு அதிக அன்பின் காரணமாகவும் தொப்புள்கொடி உறவு என்பதாலும் மலேசியாவில் வாழும் இந்தியர்களும் மலேசிய தொப்புள்கொடி உறவுகளும் வாட்ஸ்அப் மற்றும் முகநூல் மூலமாக குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றீர்கள். அதில் பல நேரங்களில் இந்திய அரசின் மீதும் மாநில அரசின் மீதும் குற்றம் சுமத்தி தெரிந்தோ தெரியாமலோ சில தவறான செய்திகளை அதாவது சிறுபான்மை மக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது என்பது மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்தி அனுப்புகிறீர்கள். இது முற்றிலும் தவறு. அந்த மாதிரியான செய்திகளை அனுப்பவே அனுப்பாதீர்கள். என்.ஐ.ஏ. நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி என்கிற அமைப்பு இந்திய அரசிடம் இருக்கிறது. நீங்கள் அரசுக்கு எதிராக அனுப்பும் செய்திகள் இந்த ஏஜென்சி மூலம் இந்திய அரசிடம் பதிவாகிவிடும். இதனால் பாதிக்கப்படுவது இந்தியாவிலுள்ள சிறுபான்மையினரும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களாகிய உங்கள் தொப்புள்கொடி உறவான நாங்கள்தான் என்பதை தெள்ளத் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் அபுபாக்கார் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

“எங்கள் தொப்புள்கொடி உறவான உங்களிடம் வேண்டி விருப்பி கேட்டுக் கொள்வதெல்லாம் இந்திய அரசாங்கத்தைப்பற்றி தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தி குறுஞ்செய்தி அனுப்பாதீர்கள். இதுபோன்ற செய்திகளை ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி அனுப்புவதால் எதிர்மறையான விளைவுகள்தான் ஏற்படுமே தவிர, எந்தவிதமான பொருளாதாரத்திலோ முன்னேற்றத்திலோ சிறுபான்மை மக்களான எங்களுக்கு எந்த உதவியும் செய்யாது. இது பாதகமே விளைவிக்கும் என்பதை தெள்ளத் தெளிவாக இதன் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் அபுபாக்கார் குறிப்பிட்டார்.

“நேற்று முன்தினம் பினாங்கிலிருந்து எனது நண்பர் ஒருவர் என்னிடம் தொலைபேசியில் பேசினார். ஹாசியார் இந்திய அரசு முஸ்லீம் மக்களுக்கு வழங்கிய மானியத்தை எல்லாம் பிஜேபி அரசு எடுத்துவிட்டது என்று மிகக்கடுமையாக என்னிடம் பேசினார். அப்போது நான் அவரிடம் உங்களுக்கு தெளிவாக எதுவும் தெரியவில்லை. பிஜேபிக்கும் ஹஜ் மானியத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த மானியம் நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்டதற்குக் காரணம், மானியத் தொகை நேரடியாக ஹஜ் பயணிகளுக்கு போய் சேருவதில்லை. அது ஏர் இந்தியா விமானத்துறைக்கே போகிறது. ஏர் இந்தியா விமானமும் இந்திய அரசுடையதுதான். மானியத்தொகை ஹஜ் பயணிகள் என்ற பெயரில் திரும்பவும் அரசுக்கே போகிறது என்பதை உச்சநீதிமன்றம் கண்டறிந்து அதை நிறுத்திவிட்டு, அந்த மானியத்தொகையை இஸ்லாமிய பெண்கள் கல்விக்கு கொடுக்க வேண்டும் என்று தெள்ளத் தெளிவாக உத்தரவிட்டது. இதுதான் உண்மை என்று தெளிவுபடுத்தினேன்” என்றும் அபுபாக்காரின் அறிக்கை தெரிவித்தது.

“நான் காங்கிரஸ் ஆட்சியில் ஹஜ் கமிட்டியின் தலைவராகவும் பிஜேபி ஆட்சியில் இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவராகவும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். இதுவரை ஹஜ் தொடர்பான கோப்புகளும் சிறுபான்மையினரின் கோப்புகளும் தாமதமானதே கிடையாது. இந்த மலேசிய தீபகற்பம் பொருளாதாரத்திலும் சமாதானத்திலும் ஆசியாவிலேயே முதல் இடத்தில் இருக்க எல்லாம் வல்ல இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்” என்று அபுபக்கர் மேலும் தெரிவித்தார்.