Home One Line P2 தேசிய நிலையிலான உயர்நிலைச் சிந்தனைத் திறன் புதிர்ப்போட்டி 2019

தேசிய நிலையிலான உயர்நிலைச் சிந்தனைத் திறன் புதிர்ப்போட்டி 2019

2961
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சிந்தனை என்பது மனிதனின் பரிணாம வளர்ச்சியுடன் நெருங்கியத் தொடர்புடையது. மனிதன் வளர சிந்தனையும் உயர்ந்தது. சிந்தனை உயர மனுக்குலம் சீரடைந்தது. அப்படி, சீர்பெற்ற சிந்தனையாக உருவெடுத்துள்ளதுதான் உயர் நிலை சிந்தனைத் திறன் (Higher Order thinking skills).

இன்று இந்த உயர் நிலை சிந்தனைத் திறன் உலகை ஆளும் சிந்தனைக் களமாக உருப்பெற்றுள்ளது. இந்த 21-ஆம்  நூற்றாண்டின் முதன்மைத் திறனாக விளங்கும் உயர்நிலை சிந்தனைத் திறன் என்பது ஒரு தனிப்பெரும் ஆற்றல். ஒரு சிக்கலைத் தீர்க்க, முடிவெடுக்க, புத்தாக்கங்களைப் பெற, புதுப்புனைவுகளைச் செய்ய, அறிவாற்றல் திறன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துவதே உயர் நிலை சிந்தனைத் திறன் எனப்படுகிறது.

இன்றைய நிலையில், மாணவர்கள் பயிலும் அனைத்துப் பாடங்களிலும் உயர்நிலைச் சிந்தனைத் திறன் முக்கிய கற்றல் கற்பித்தல் கூறுகளில் ஒன்றாக இடம்பெற்று வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் நம் குழந்தைகளின் உயர்நிலைச் சிந்தனைத் திறன் ஆளுமையைக் கண்டறியும் நோக்கில் மாநில – தேசிய நிலையிலான முதல் உயர்நிலைச் சிந்தனைத் திறன் புதிர்ப்போட்டியை இல்ஹாம் கல்வி கழகம் நாடுதழுவிய நிலையில் இவ்வாண்டு முதல் முறையாக ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

ஜோகூர், கெடா, நெகிரி செம்பிலான், கூட்டரசு பிரதேசம், சிலாங்கூர், பேராக் என ஆறு மாநிலங்களில் நடத்தப்பெற்ற மாநில நிலையிலான போட்டிகளில் 671 மாணவர்கள் 92 பள்ளிகளைப் பிரநிதித்து கலந்து கொண்டனர். சிறப்பான புள்ளிகளைப் பெற்ற 114 மாணவர்களுக்குத் தேசிய நிலையிலான புதிர்ப்போட்டி கடந்த சனிக்கிழமை ஜூலை 27-ஆம் நாள் புத்ரா பல்கலைக்கழகத்தின் நவீன மொழி மற்றும் தொடர்பாடல் புலத்தில் நடைப்பெற்றது.

நீர், நில, இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தேசிய நிலையிலான புதிர்ப் போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், புத்ரா பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்து அதன் துணைவேந்தர் மதிப்புமிகு பேராசிரியர் ரொஸ்லான் சுலைமான் கலந்து சிறப்பித்தார். புத்ரா பல்கலைக்கழக புறப்பாட மற்றும் மாணவர் மேம்பாட்டு மையத்தின் இயக்குநரும் புத்ரா பல்கலைக்கழக இந்து சங்கத்தின் ஆலோசகருமான பேராசிரியர் முனைவர் பரமசிவம் முத்துசாமியும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

புத்ரா பல்கலைக்கழகத்தை படிநிகர்த்து உரையாற்றிய துணைவேந்தர் மதிப்புமிகு பேராசிரியர் ரொஸ்லான் சுலைமான், தமதுரையில் ”நமது அன்றாட வாழ்க்கையில் இந்த உயர் நிலை சிந்தனைத் திறன் மிகப் பெரிய பங்கினை ஆற்றுகிறது. இந்தத் திறன் கைவரப்பெற்றிருப்பதன் மூலம் பின்வரும் நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. சரியான முடுவெடுத்தல், புரிதலை மேம்படுத்துதல், தகவலை மிகச் சரியாகப் பயன்படுத்துதல், தெளிவாக விளக்கமளித்தல், சிக்கல்களை முறையான வழியில் தீர்த்து; சுமூகச் சூழலை உருவாக்குதல், இடம், பொருள், ஏவலறிந்து வினையாற்றுதல் மற்றும் எதிர்காலத்தை சிறந்த முறையில் திட்டமிடுதல் போன்ற பண்புநலன்கள் கைவரப்பெறுவதற்கு இந்த உயர் நிலை சிந்தனைத் திறன் பெரும்பங்காற்றுகிறது” என விளக்கினார்.

அவரைத் தொடர்ந்து, நிகழ்ச்சியினைத் தொடக்கி வைத்து உரையாற்றிய நீர், நில இயற்கைவள அமைச்சர் சேவியர் ஜெயகுமார், ”இந்த நாட்டில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்வினை வசமாக்கிக் கொள்ள சிறந்த கல்வியைப் பெற வேண்டும். கல்வி ஒன்றினால் மட்டுமே சமுதாய உருமாற்றத்தை உறுதி செய்ய முடியும்” என்றார். மேலும், நாளாந்த வாழ்வில் கிடைக்கப்பெறும் படிப்பினை அடிப்படையான கொண்டு வாழ்வின் சவால்களை எதிர்கொள்கிற வழிமுறைகளைக் கண்டறியும் மாணவர்கள் அறிவார்ந்த மாணவர்களாக உருவாகிறார்கள் எனக் குறிப்பிட்டார்.

தேசிய நிலையிலான உயர்நிலைச் சிந்தனைத் திறன் புதிர்ப்போட்டியில் முதல் நிலை விருதான அக்ரிட் ஜஸ்வால் விருதினையும் 500 ரிங்கிட் ரொக்கத்தையும் அப்துல் கலாம் சுழற்கிண்ணத்தையும் சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை மாணவர் செல்வி ஜெயஸ்ரீ வென்றார்.

அப்துல் கலாமின் நான்காம் ஆண்டு நினைவு நாளான ஜூலை 27-ஆம் நாள் இப்போட்டி நடத்தப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் நிலை வெற்றியாளருக்குரிய விருதான கிரேகரி ஆர் ஸ்மித் விருதினையும் 300 ரிங்கிட் ரொக்கத்தையும் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி மாணவர் செல்வன் ஹரிஷ் வர்மா சிவநேசன் வெற்றி கொண்டார்.

மூன்றாம் நிலை வெற்றியாளருக்குரிய விருதான பிரியான்ஸி சோமானி விருதினையும் 200 ரிங்கிட் ரொக்கப் பணத்தையும் சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப்பள்ளி மாணவர் செல்வன் சர்வேஷ் சந்திரன் வென்றார்.

மேலும், 22 மாணவர்களுக்குச் சிறப்பு அடைவுநிலைக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. பங்குகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இல்ஹாம் கல்விக் கழகத்தின் தொடர் நடவடிக்கைகள் குறித்த விபரங்களை Persatuan Pendidikan Ilham என்ற முகநூல் பக்கத்திலும் ilham.org.my என்ற அகப்பக்கத்திலும் மேல் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.