கோலாலம்பூர்: இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் தலைமையில், இந்தியாவிற்கு பணி நிமித்தமாக வருகை மேற்கொண்டுள்ள ஜசெக தலைவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேற்று வெள்ளிக்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது, பினாங்கு மற்றும் தமிழகத்துக்கு இடையே இருக்கும் வரலாற்று ரீதியிலான உறவினை, பேராசிரியர் இராமசாமி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துக் கூறினார்.
“தமிழகத்தில் இருந்து மலாயாவிற்கு வந்து சேர்ந்த தமிழர்கள், முதலில் பினாங்கில்தான் கால் பதித்தனர். பினாங்கிற்கும் தமிழகத்துக்கும் உள்ள உறவு, தொப்புள் கொடி உறவு போன்றது” என்று அவர் கூறினார்.
மலேசியாவிலிருந்து இந்தியாவிற்கு வருகை புரிபவர்களில் 95 விழுக்காட்டினர் மலேசிய தமிழர்கள் என்றும் தற்பொழுது அவர்களுக்கு விதிக்கப்படும் விசா கட்டணமானது 500 ரிங்கிட், மிகவும் அதிகம் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் சாதாரண தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் பேராசிரியர் விளக்கினார்.
ஆகவே, விசா கட்டணத்தின் விலையை குறைக்குமாறு, தமிழக அரசு, இந்திய அரசுக்கு கோரிக்கை விடுக்குமாறு, பேராசிரியர் இராமசாமி முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டனர்.
பினாங்கு மாநிலத்திற்கு அதிகமான இந்திய நாட்டினர் வருகை புரிவதாலும், பணி செய்வதாலும், இந்திய துணைத் தூதரகம் ஒன்றை அம்மாநிலத்தில் அமைக்குமாறு இந்திய அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும், அதனை இந்திய அரசிடம் பரிந்துரைக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஜனநாயக செயல் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சிலரை உள்ளடக்கிய ஜசெக குழு இந்தியாவிற்கு ஏழு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டு, மலேசிய மாணவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து வருகின்றனர்.