சான் பிரான்சிஸ்கோ – உலகம் எங்கும் மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டிருக்கும் வாட்ஸ்எப் குறுஞ்செயலி தொடர்ந்து புதிய தொழில் நுட்ப அம்சங்களையும், வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பாக ஐபோன்களுக்கான ஐஓஎஸ் மென்பொருள் உள்ளடக்கத்தில் செல்பேசிகளின் திரையைப் பூட்டி வைப்பதற்கான வசதியைக் கொண்டுவந்த வாட்ஸ்எப், தற்போது அண்ட்ரோய்டு பயனர்களுக்காக ‘விரல்ரேகை திறவு’ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒருவரின் விரல் ரேகையைக் கொண்டு மட்டுமே அவரது குறுஞ்செயலி பக்கத்தைத் திறக்க முடியும். அந்த குறிப்பிட்ட விரல் ரேகை பதிவு இல்லையென்றால் வேறு யாராலும் வாட்ஸ்எப் குறுஞ்செயலி பக்கத்தைத் திறக்க முடியாது.
எனினும், வாட்ஸ்எப் குறுஞ்செயலி மூடப்பட்டிருக்கும் தருணங்களிலும் செல்பேசி அழைப்புகள் வந்தால் பயனர்கள் அந்த அழைப்பை ஏற்று பேச முடியும்.
இந்தப் புதிய வசதியைப் பெற பயனர்கள் வாட்ஸ்அப் குறுஞ்செயலியைத் திறந்து ‘செட்டிங்ஸ்’ பிரிவில் (Settings) ‘அக்கவுண்ட்’ (Account) என்ற பிரிவுக்குச் செல்ல வேண்டும்.
அதன்பின்னர் ‘பிரைவேசி’ (Privacy) என்ற பிரிவுக்குச் சென்று பார்த்தால் அங்கு ‘பிங்கர்பிரிண்ட்’ (Fingerprint lock) என்ற பகுதி தென்படும்.
ஆனால் இதையெல்லாம் செய்வதற்கு முன்னால் உங்களின் செல்பேசியில் வாட்ஸ்அப் மென்பொருளின் “2.19.221 Android beta” என்ற இலக்கம் கொண்ட மென்பொருளை நீங்கள் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.
இதற்கு முந்திய மென்பொருளில் வாட்ஸ்அப்பின் இந்த புதிய வசதி கிடைக்கக் கூடும் என்றாலும், ஆகக் கடைசியான மென்பொருள் உள்ளடக்கத்தில்தான் வாட்ஸ்அப் தனது புதிய வசதிகளையும், அம்சங்களையும் உள்ளீடு செய்கிறது என்பதையும் பயனர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.