புது டில்லி: ‘நீரின்றி அமையாது உலகு..’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் உரையாற்றினார்.
இந்திய நாட்டில் நீர் சேமிப்பின் முக்கியத்துவம் மிகவும் அவசியமானது என்றும், அதை நாட்டு மக்கள் அனைவரும் அறிந்திருப்பதாகவும் மோடி தெரிவித்தார். அதற்காக இந்திய அரசு ஜல்சக்தி என்ற புதிய அமைச்சை அமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்திட்டமானது மேலும் வேகமாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, 21-ஆம் நூற்றாண்டுக்கான இந்தியாவை உருவாக்குவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கு இருந்த தடைகளை கடந்த பத்து வாரக் கால ஆட்சியில் நீக்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். ஆட்சிக்கு வந்து கடந்த குறுகிய காலத்தில் மிக முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறிய மோடி, காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கம், முத்தலாக் தடை உள்ளிட்டவற்றை குறிப்பிட்டுக் கூறினார்.